சத்தமில்லாமல் சாதனை படைக்கும் சமந்தா, சோனம் கபூர்

நடிகைகளுக்கு திருமணமானாலே ஒதுக்கி வைக்கும், தரம்தாழ்த்தும் இந்திய சினிமாவின் வரையறையை இந்த இளம் நடிகைகள் மாற்றி எழுதியிருக்கிறார்கள்.

பாபு

இந்திய சினிமாவின் இறுக்கமான விதிகளை இரண்டு இளம் பெண்கள் சத்தமில்லாமல் உடைத்திருக்கிறார்கள். சமந்தா, சோனம் கபூர் நிகழ்த்தியிருக்கும் இந்த சாதனை சாமானியமானதில்லை.

இந்திய சினிமாவில் ஒரு நடிகையின் ஆயுள் என்பது திருமணம் ஆகும் வரையே. பதினெட்டு வயதில் திருமணமானாலும் அடுத்து அண்ணி, அக்கா வேடங்களில் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும். இதன் காரணமாகவே நடிகைகள் தங்களின் திருமண வயதை முடிந்தவரையில் தள்ளிப்போடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களில் இதில் மாறுதல் ஏற்பட்டது. இந்தி சினிமாவின் மிகப்பெரிய வர்த்தகமும், மேல்நாட்டு கலாச்சாரத்தின் தாக்கமும் நடிகைகளுக்கு நலம் பயத்தன. திருமணமான வித்யாபாலன், ராணி முகர்ஜி போன்ற நடிகைகள் தொடர்ந்து நாயகிகளாக நடிக்க ஆரம்பித்தனர். நாயகி மையப்படங்களும் அதிக அளவில் வரத்தொடங்கின. அதன் தாக்கம் தமிழ் சினிமாவிலும் பிரதிபலிக்கிறது. ஆனால், அதில் ஒரு முக்கிய விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்த நடிகைகள் சினிமாவில் உள்ள இளம் நடிகர்களுடன் நடிப்பதில்லை. மூத்த நடிகர்களுடன் அல்லது நாயகி மையப்படங்களில் மட்டுமே நடிக்கிறார்கள்.

நடிகைக்கு திருமணமானால் – அவர் எவ்வளவு இளமையானவராக இருந்தாலும் மூத்த நடிகர்களுடன் அல்லது நாயகி மையப்படங்களில் மட்டுமே நடிக்க முடியும் என்ற நிலையே இன்றுவரை தொடர்கிறது. இந்த இடத்தில்தான் சோனம் கபூரும், சமந்தாவும் ஓர் உடைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

சமந்தா மார்கெட்டின் உச்சத்தில் இருக்கையில் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் அவரது சினிமா வாழ்க்கையை பாதிக்கவில்லை. தெலுங்கின் முன்னணி இளம் நடிகர் ராம் சரணுடன் அவர் நடித்த ரங்கஸ்தலம் 100 கோடிகளை கடந்து வசூலித்துள்ளது. இன்று அவரது நடிப்பில் நடிகையர் திலகம், இரும்புத்திரை என இரு படங்கள் வெளியாகியுள்ளன. விரைவில் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் படங்கள் வெளியாக உள்ளன. கன்னட யு டர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்குகளில் சமந்தா நடித்து வருகிறார்.

ரங்கஸ்தலம் படத்தின் வெற்றியின் காரணமாக இளம் தெலுங்கு நடிகர்கள் அவருடன் நடிக்க ஆர்வமாக உள்ளனர். தமிழிலும் அதேதான்நிலை. மூத்த நடிகர்கள், நாயகி மையப்படம் என்று மெயின்ஸ்ட்ரீமிலிருந்து திருமணம் சமந்தாவை தள்ளி நிறுத்தவில்லை. இன்னும் பல வருடங்களுக்கு அவர் முன்னணி இளம் நடிகர்களுடன் இணைந்து நடிப்பார் என்று உத்தரவாதமாகச் சொல்லலாம்.

சோனம் கபூரும் அப்படியே. சமீபத்தில் திருமணமான அவரது நடிப்பில் வீர் தி வெடிங், சஞ்சு ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. துல்கர் சல்மானுடன் தி ஸோயா பேக்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏக் லடுக்கி கோ தேகா தோ ஐசா லகா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவரும் சமந்தா போன்று இன்னும் பல வருடங்கள் இளம் நடிகர்களுடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கலாம். இவ்விரு நடிகைகளுடன் மலையாளத்தில் ரீமா கல்லிங்கலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நடிகைகளுக்கு திருமணமானாலே அவர்களை ஒதுக்கி வைக்கும், அண்ணி, அம்மா வேடங்களுக்கே லாயக்கு என்று தரம்தாழ்த்தும் இந்திய சினிமாவின் வரையறையை இந்த இளம் நடிகைகள் மாற்றி எழுதியிருக்கிறார்கள். நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

×Close
×Close