எவ்வளவு உச்சத்திலிருக்கும் நடிகை என்றாலும் திருமணமாகி விட்டால், சுய விருப்பம் அல்லது வீட்டாரின் விருப்பம் என படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வார்கள். ஒரு பெரும் இடைவெளிக்குப் பிறகு அக்கா, அண்ணி, அல்லது அம்மா கதாபாத்திரங்களில் பின்னர் ரீ எண்ட்ரி தருவார்கள்.
தமிழ் சினிமாவில் இந்த எழுதப் படாத விதியை நடிகை சமந்தா தகர்த்தெறிந்திருக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அவருக்கு ’ஓ பேபி’ திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது.
தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ’சவுத் கொரியன்’ திரைப்படமான ‘மிஸ் கிரானி’யை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கும் இதில், சமந்தாவுடன் இணைந்து லட்சுமி, நாக செளரியா, ராஜேந்திர பிரசாத், ஊர்வசி, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ’ஓ பேபி’ படத்தின் ரிலீஸை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றிருக்கிறார் சமந்தா. 3500 படிக்கட்டுகளில் பாதயாத்திரை செய்த அவர், இரவு திருமலையில் தங்கி விட்டு, அதிகாலை சுப்ரபாத தரிசனத்தில் பங்கு பெற்றார். சமந்தாவுடன் வி.ஜே ரம்யாவும் சென்றிருக்கிறார்.
சமந்தாவுடன் திருப்பதியில் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்த ரம்யா, “நிறைய நடை, கொஞ்சம் பேச்சு என அற்புதமாக அமைந்தது இந்த தரிசனம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன் ‘சீமராஜா’ படத்தின் வெளியீட்டுக்கு முன்பும் சமந்தா, திருப்பதியில் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.