samuthirakani | tamil-cinema: 'பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா இயக்குநர் அமீர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளம்பிய நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், ஞானவேல் ராஜாவின் கருத்துக்கு எதிராக திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டனர்.
மன்னிப்பு
இதனையடுத்து, இயக்குநர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து நேற்று புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "'பருத்தி வீரன்' பிரச்சினை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே 'அமீர் அண்ணா' என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன்.
அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தின. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்." என்று தெரிவித்து இருந்தார்.
பதிலடி
இந்த நிலையில், 'நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே, இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது' என ஞானவேல் ராஜாவை சமுத்திரகனி வெளுத்து வாங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:-
பிரதர், இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியது. எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சிங்களோ, அதே பொது வெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும். நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்.
அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா, கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் "பருத்திவீரன்" திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம், அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க. நீங்கதான், 'அம்பானி பேமிலியாச்சே', காலம் கடந்த நீதி. மறுக்கப்பட்ட நீதி.
இவ்வாறு அந்தப் பதிவில் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“