சங்கிலி புங்கிலி கதவ தொற: சினிமா விமர்சனம்

அவ்வப்போது கைத்தட்டலும் சிரிப்புச் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன என்ற அளவில் இயக்குநருக்கு வெற்றிதான்

சந்துரு

வாடகை வீட்டில் இருந்து பட்ட அவமானங்கள் போதும் என்று சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஜீவாவின் கனவு. பெரிய பங்களா ஒன்றைப் பார்த்து, அதில் பேய் இருப்பதாகக் கதை கட்டிவிட்டு மலிவான விலைக்கு அதைவாங்கிவிடுகிறார். வாழ்வின் லட்சியம் பூர்த்தியான திருப்தியில் தன் அம்மாவுடனும் (ராதிகா சரத்குமார்) அத்தை குடும்பத்துடனும் நண்பனுடனும் (சூரி) வீட்டுக்குக் குடிபோனால், அங்கே தம்பி ராமையாவின் குடும்பம் இந்த வீடு எங்களுக்குத்தான் சொந்தம் என்கிறது. அவர்களை விரட்ட, மீண்டும் பேய் அஸ்திரத்தைக் கையிலெடுக்கும் சூரியும் ஜீவாவும் உண்மையிலேயே அந்த வீட்டில் பேய் இருப்பதை அறிந்து அதிர்ந்துபோகிறார்கள். இதற்கிடையில் ராமையாவின் பெண் ஸ்ரீதிவ்யாவுக்கும் ஜீவாவுக்கும் காதல். ஜீவா பேயை எப்படிச் சமாளிக்கிறார், காதலை எப்படி நிறைவேற்றிக்கொள்கிறார் என்பதே கதை.

கைவிடப்பட்ட பங்களா, பங்களாவுக்குள் பெரிய கூட்டம், பங்களாவில் ஒரு பேய், அது எல்லாரையும் உலுக்கி எடுக்கிறது. பேயோட்டியின் மூலம் பேயின் பழைய கதை தெரிகிறது. ஒரு நல்ல மனிதரின் ஆன்மாதான் அந்தப் பேய் என்பது தெரியவருகிறது. அந்தப் பேய்க்குத் தேவையானதைச் செய்து சாந்தப்படுத்துகிறார்கள். இடையில் காதல், காமெடி ஆகிய மசாலாக்கள். இதுபோன்ற திரைக்கதையை இன்னும் எத்தனை படங்களில்தான் பயன்படுத்துவார்கள்? ஒவ்வொரு காட்சியும் அச்சுப் பிசகாமல் எதிர்பார்த்தபடியே நடக்கின்றன. பேய் இருப்பதாகப் பிறரை நம்பவைப்பதற்கான உத்திகளும் ஒரு சில படங்களில் வந்துவிட்டன.

புதுமுக இயக்குநர் ஐக் கலகலப்பையும் திகிலையும் சரி விகிதத்தில் கலந்துதர முயன்றிருக்கிறார். ஆனால், இரண்டிலும்புதிதாகவோ புதுமையாகவோ அதிகம் இல்லை. பேய் வரும் காட்சிகளில் கற்பனை வளம் இல்லாததால் திகிலோ த்ரில்லோ இல்லை. காதல் காட்சிகளும் சவசவவென்று உள்ளன. காமெடியும் பல படங்களில் பார்த்த காட்சிகளின்கலவைதான். தேவதர்ஷினி, தம்பி ராமையா காமெடியில் காம நெடி ரொம்பவே தூக்கல். இலை காமெடி மட்டும் சிரிப்பை வரவழைக்கிறது. ஜீவா, குடித்துவிட்டு வந்து ‘அண்ணாமலை’ ஸ்டைலில் பேயிடம் பேசும் காட்சி ரசிக்கும்படிஇருக்கிறது.

பழைய கதை, பழகிப்போன திரைக்கதை என்றாலும் திரையரங்கில் அவ்வப்போது கைத்தட்டலும் சிரிப்புச் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன என்ற அளவில் இயக்குநருக்கு வெற்றிதான். குடும்ப ஒற்றுமை என்னும் செய்தியை முன்னிறுத்தும் படம், குடும்பத்துக்குள் பிளவு என்னும் சங்கதியை இன்னும் அழுத்தமாகக் காட்டியிருக்கலாம். பேய்இருப்பதாகப் பிறரை நம்பவைக்கும் ஜீவாவின் உத்திகளை வைத்து சஸ்பென்ஸ் கூட்டியிருக்கக்கூடிய வாய்ப்பை இயக்குநர் தவறவிட்டிருக்கிறார். காதல் காட்சிகளையாவது ரசனையோடு அமைத்திருக்கலாம்.

ஜீவாவுக்கு வழக்கமான நடிப்புதான். காமெடி, திகில் காட்சிகளில் அனாயாசமாகச் செய்கிறார். அழகாகத்தோற்றமளிக்கும் ஸ்ரீதிவ்யாவுக்குச் சொல்லிக்கொள்ளும்படி பாத்திரம் இல்லை. படம் முழுவதும் வரும் சூரி என்னென்னமோ செய்து பார்க்கிறார். ஆனால், மாகெடி ஐடியாக்களில் புதிதாக எதுவும் இல்லாததால் சிரிப்புவரவில்லை. தம்பி ராமையா, திவ்யதர்ஷினியின் நடிப்பு மனதில் நிற்கிறது. ராதிகாவும் ராதாரவியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

விஷால் சந்திரசேகர் இசையில் ஓரிரு பாடல்கள் கேட்கும்படி உள்லன. பின்னணி இசையில் திகில் படத்துக்கான தன்மை ரொம்பவே குறைகிறது. டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங்கில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே கச்சிதம் தெரிகிறது. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்தைத் தூக்கிப்பிடிக்கிறது.

பழைய கதையாக இருந்தாலும் அதைக் கையாண்ட விதத்தில் புதுமை காட்டி இன்னும் மிரளவும் சிரிக்கவும் வைத்திருக்கலாம்.

மதிப்பு: 2.5 / 5

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close