பாபு:
சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறான சஞ்சு சென்ற வாரம் வெளியானது. போதை, காதல், ஏ.கே.47, ஜெயில், பெயில் என்று சஞ்சய் தத்தின் வாழ்க்கையானது இந்தியன் கமர்ஷியல் சினிமாவை மிஞ்சியது. படத்தை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும். தவிர சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூர் ட்ரெய்லரிலேயே அசத்தியிருந்தார்.
இந்தியாவில் சுமார் 4000 திரையரங்குகளிலும், வெளிநாடுகளில் சுமார் 1500 திரையரங்குகளிலும் படம் வெளியானது. இந்தியாவில் படம் முதல்நாளே பட்டையை கிளப்பியது. வசூலை பார்க்கும் முன் சஞ்சு படம் குறித்த முக்கியமான சர்ச்சை ஒன்றை பார்க்கலாம். ரொம்பவே சின்ன சர்ச்சை.
இந்திய சினிமாவில் சஞ்சய் தத்தின் இடம் மிகச்சிறியது. சல்மான் கான் போல் கமர்ஷியல் சூப்பர் ஸ்டாரும் இல்லை. ஓம்பூரி, நஸ்ருதின் ஷா போன்று நடிப்பில் சிறந்தவரும் அல்ல. அப்பா சினிமாக்காரர் என்பதால் படவுலகில் நுழைந்தவர், ஹிட்டைவிட அதிக ப்ளாப்களை தந்தவர். இவரது வாழ்க்கை வரலாறை எடுக்க வேண்டிய தேவை என்ன. இவரென்ன திலீப் குமாரா. சஞ்சய் தத்தின் வாழ்க்கையிலிருந்து இந்தியர்கள் அறிந்து கொள்ள அப்படி என்ன தத்துவம் இருக்கிறது என்று ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது. மெக்சிகோவின் கடத்தல் மன்னன் எஸ்கோபர் குறித்து எத்தனை படங்கள் எடுத்திருக்கிறார்கள்? அவரைவிட சஞ்சய் தத் மோசமா என்று உடனடியாக இந்த கேள்விக்கு பதிலளிக்கலாம். ராஜ்குமார் ஹிரானி இதைவிட பெட்டரான பதில் வைத்திருக்கலாம்.
சரி, நம் விஷயத்துக்கு வருவோம். ரன்பீர் கபூரின் சமீபகால படங்கள் சரியாகப் போகவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஜக்கா ஜாஸுஸ் ப்ளாப். படத்தை அவரே தயாரித்திருந்தார். அதனால் சஞ்சு வெற்றி பெறுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், அந்த கேள்வியை யாரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. காரணம் படத்தை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி.
இவர் இயக்கிய 3 இடியட்ஸ் படம்தான் முதல்முதலில் இந்தியாவில் 200 கோடிகளை கடந்து வசூலித்தது. இவரது பிகே திரைப்படம்தான் முதலில் 300 கோடிகளை இந்தியாவில் தாண்டியது. 2,00 300 கோடி கிளப்களை ஓபன் செய்த ராசிக்காரர் என்பதால் சஞ்சு மீது யாருக்கும் சந்தேகமில்லை. முதல்நாளே படத்தின் வசூல் அதனை நிரூபித்தது.
சஞ்சு முதல்நாளில் இந்தியாவில் 34.75 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது நாள் சனிக்கிழமை 38.60 கோடிகள். ஞாயிறு 46.71 கோடிகள். ஆக, முதல் மூன்று தினங்களில் 100 கோடிகளை கடந்து 120.06 கோடிகளை வசூலித்துள்ளது. ரன்பீர் கபூர் படங்களில் இதுவே அதிகபட்ச ஓபனிங். இதற்கு முன் அவர் நடித்த பேஷ்ராம் திரைப்படம் முதல்நாளில் 21.56 கோடிகளை வசூலித்ததே சாதனையாக இருந்தது. சஞ்சு அதனை உடைத்திருக்கிறது.
படத்துக்கு கிடைத்திருக்கும் ஆதரவை வைத்து இந்தியாவில் 250 கோடிகளை படம் அனாயாசமாக தாண்டும் என கணித்திருக்கிறார்கள். அதேநேரம் வெளிநாடுகளில் படம் டல்லடிக்கிறது. பெரிய வசூலை படம் எட்டுவதற்கான சாத்தியமில்லை என்கிறார்கள்.
சஞ்சு ராஜ்குமார் ஹிரானி என்ற இயக்குநருக்கு கிடைத்த வெற்றி. ஒரு படத்தை கமர்ஷியலாக எப்படி எடுப்பது என்பதை இவரிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே இப்போது சஞ்சு. விரைவில் 3 இடியட்ஸ் இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாக ஹிரானி கூறியுள்ளார்.
வெயிட் பண்றோம் பாஸ்.