கபாலி, காலாவில் விண்டேஜ் ரஜினியை தொலைத்திருந்த ரசிகர்கள், அப்படங்களின் கதைக்களங்களை ரசித்தாலும், ரஜினியை ரசிக்கவில்லை. 2.0 ஒரு பிரம்மாண்ட அத்தியாயம் என்றாலும், அதிலும் ரஜினியை ரசிகர்கள் மிஸ் செய்தார்கள்.
அப்போது தான், ரஜினியின் தீவிர ரசிகரான இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேட்ட மூலம், ரஜினியை மீண்டும் ரஜினியாகக் காட்டியிருந்தார். ரசிகர்கள் படத்தை கொண்டாடித் தீர்த்தனர். பல காட்சிகளில் பல வருடங்களுக்குப் பிறகு ரஜினியை ரசிக்க வைத்திருந்தார்.
அடுத்ததாக ரஜினியுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைவதாக தகவல்கள் வெளியாகின. இதனை இரு தரப்புமே மறுக்கவில்லை. இந்நிலையில், ரஜினி - முருகதாஸ் இணையும் புதிய படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதனை அவரே தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டரில், "இறுதியாக ரஜினி சாருடன் இணைந்துவிட்டேன். தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
சந்தோஷ் சிவனின் இந்த ட்வீட்டை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஸ்மைலி குறியிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதன் மூலம், ரஜினியும் முருகதாஸும் இணைவது கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து மெகா ஹிட்டான 'தளபதி' படத்திற்கு பிறகு மீண்டும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ரஜினியுடன் இணைவதால், இப்படத்தின் பிரம்மாண்டமும், எதிர்பார்ப்பும் தாறுமாறாக எகிறியுள்ளது.