தமிழ் சினிமாவுக்கு 77-ல் அறிமுகமான நடிகர் சரத்பாபு பட்டின பிரவேசம், நிழல் நிஜமாகிறது உட்பட சில படங்களில் நடித்திருந்தார். 78-ல் இயக்குநர் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் தான் அவரை ரசிகர்களுக்கு நெருக்கமாக்கியது. குறிப்பாக இயல்பான முக பாவனைகளுடன் ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ என அவர் வண்டி ஓட்டிக் கொண்டே பாடிய அந்த பாடலை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
அதன் பிறகு பல முக்கியமான திரைப்படங்களில் அவரின் பங்கு பங்களிப்பு இருந்தது. நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, நெற்றிக்கண், சலங்கை ஒலி, பகல் நிலவு, அண்ணாமலை, முத்து என அவரது முக்கியப் படங்களை இன்னும் அடுக்கலாம். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் என்ற பட்டியலில் இருக்கும் அத்தனை இயக்குநர்களின் படங்களிலும் நடித்துவிட்டார். அவர் நடித்த படங்களில், எப்போதுமே ‘முள்ளும் மலரும்’ கிளாஸிக் ரகம். சிலரை மட்டும் தான் இயக்குநரின் நடிகர் எனச் சொல்வோம். அந்த வகையில் தனக்குக் கொடுக்கப்படும் பாத்திரத்தோடு ஒன்றி, அதனை இயல்பாக வெளிப்படுத்துவதில் சரத்பாபு கைத்தேர்ந்தவர்.
ஆனால் அவர் மீது ஒரு விமர்சனம் மட்டும் எப்போதும் இருந்து வந்தது. அதாவது நடிகை ரமாபிரபாவை அவர் முதல் திருமணம் செய்துக் கொண்டு, சொத்துக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் மட்டுமே அவரைப் பயன்படுத்தியதாக பல்வேறு ஊடகங்களில் கூறி வந்தார் ரமா. (சாந்தி நிலையம் திரைப்படத்தில் நடிகர் நாகேஷ் ஜோடியாக நடித்திருந்தவர்)
ஆனால் ரமாபிரபாவின் இந்தக் குற்றச்சாட்டை மறுக்காமலும் / ஏற்காமலும் மெளனம் சாதித்து வந்தார் சரத். இந்நிலையில் தெலுங்கு தேசத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று வெகுநாட்களாக முயன்று தற்போது, இந்த விமர்சனத்துக்கான விடையை சரத்பாபுவிடமிருந்து பெற்றிருக்கிறார்கள். அவரின் விளக்கம் பின்வருமாறு:
“அப்போது எனக்கு 22 வயது. என்னை விட ரமா பிரபா 5,6 வயதுகள் மூத்தவர். நானும் அவரும் இணைந்து வாழ்ந்தபோது, திருமண வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படைக் கோட்பாடே எனக்கு அப்போது தெரியாது. இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்க இருவருக்குள்ளும் அந்நியோன்யம் இருக்க வேண்டும். ஆனால் எங்களுக்குள் அப்படி ஒரு விஷயம் மருந்துக்குக் கூட இருந்ததில்லை. பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம் என ஊடகத்திடம் சொல்லி வரும் ரமா, அதனை சற்று விளக்கினால் நன்றாக இருக்கும். நான் அப்போது பல்வேறு மொழிகளில் பல்வேறு மாநிலங்களில், வெவ்வேறு ஊர்களில் படபிடிப்பில் இருந்தேன். ரமாபிரபாவும் படபிடிப்புகளில் பிஸியாக இருந்தார். அத்தனை ஆண்டுகளில் இணைந்து வாழ்ந்தது சில மாதங்களாக மட்டுமே இருக்கக் கூடும். அதோடு நான் அவரது சொத்துகளை அபகரித்ததாகக் கூறுகிறார். அப்போது அவருக்கென சென்னையில் ஒரு வீடு மட்டும் தான் இருந்தது. அதுவும் கூட அவரது தம்பி மற்றும் அவரது பெயரில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை உமாபதி சாலையில், என் சொந்த நிலத்தை விற்று வாங்கிய வீட்டை நான் தான் ரமாபிரபாவுக்குக் கொடுத்தேன். அந்த நிலத்தின் மதிப்பு இப்போது 60 கோடி ரூபாய். வீடு என்ன மதிப்பு இருக்கும் என எனக்குத் தெரியாது.
தவிர, அவர் பெயரைப் பயன்படுத்தி வாய்ப்புகள் வாங்கினேன் என்பதெல்லாம் சுத்த பொய். அவரை சந்திப்பதற்கு முன்பே முன்னணி இயக்குநர்கள் மகேந்திரன், கே.பாலச்சந்தர், அசோக் குமார் ஆகியோர் எனக்கு வாய்ப்பளித்திருந்தனர். சினிமா என்னவென்றே தெரியாத எனது குடும்பத்தில், நான் இத்துறையில் கால் பதித்து முன்னேறியது என்னுடைய கடின உழைப்பால் மட்டுமே. வீண் வதந்திகளை நம்பி என்னை யாரும் வில்லனாக நினைக்க வேண்டாம், உண்மை வெளிவர வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த நேர்க்காணலுக்கு சம்மதித்தேன்” இப்படிக் குறிப்பிட்டிருந்தார் சரத்.
1980-ல் ரமாபிரபாவுடனான திருமணம், 8 ஆண்டுகள் கழித்து விவாகரத்து என்றிருந்த சரத்பாபு பிறகு நடிகர் நம்பியாரின் மகள் சிநேகா நம்பியாரை திருமணம் செய்துக் கொண்டார். பிறகு அதுவும் கடந்த 2016-ல் விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது.