நடிகர் சரத்குமார் - ராதிகா குடும்பத்தில் இருந்து தனது முதல் ராப் இசை மூலம் இன்னொரு வாரிசு கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்து கவனம் பெற்றுள்ளார்.
நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அரசியலில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் சினிமாவில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் முன்னணி நட்சத்திரமாக நடித்துவருகிறார்.
அதே போல, சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமா உலகில் முக்கிய இளம் நடிகையாக நடித்து வருகிறார். வரலட்சுமி மிக விரைவாக இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இப்படி, சரத்குமாரின் குடும்பத்தில் அவர், அவருடைய மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி என மூன்று பேர் சினிமா கலைத்துறையில் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்.
சரத்குமார், ராதிகாவுடன் நடித்த வானம் கொட்டட்டும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, ராதிகா மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்கிறார். அதே போல, இயக்குனர் ஸ்ரீ கணேஷின் குருத்தி ஆட்டம் படத்திலும் நடித்துள்ளார். முதன்முறையாக, சரத்குமார், ராதிகா, வரலட்சுமி மூன்று பேரும் இணைந்து பிறந்தாள் பராசக்தி படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், சரத்குமாரின் மகன் ராகுல் சிங்கிள் ரா சன் டேக் ஆஃப் மூலம் ராப் இசை கலைஞராக அறிமுகமாகி உள்ளார். இந்த மியூஸிக் வீடியோவுக்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இதை அருள்நிதி நடித்த கே 13 -ஐ இயக்கிய பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார்.
இதன் மூலம், சரத்குமார் - ராதிகா குடும்பத்தில் இருந்து அவர்களுடைய மகன் ராகுல் தனது முதல் ராப் இசை மூலம் நாலாவது நபராக கலைத்துறைக்கு வந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"