Saravana Stores Legend Saravanan Tamil Movie Heroine Geethika Tiwary: இதோ வருகிறார்... அதோ வருகிறார்... என பில்டப் கொடுக்கப்பட்டு வந்த லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள், லெஜண்ட் சரவணன் என்கிற பெயரில் சினிமாவில் குதித்தேவிட்டார். அவரது புதிய படத்தை திரையுலக ஜாம்பவான்கள் ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
ஜவுளிக் கடைகள், நகைக் கடை விளம்பரங்களில் நடிக்க சினிமா ஹீரோக்கள் நடிப்பது வழக்கமாக இருந்தது. அதை மாற்றி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடை அதிபரான அருள், தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் தானே தோன்றி அசரடித்தவர். அதைத் தொடர்ந்து சினிமாவிலும் அவர் கால் பதிக்க முடிவு செய்துவிட்டதாக தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.
லெஜண்ட் சரவணன் என்கிற பெயரில் அருள் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவதாக ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 1) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, சென்னை வட பழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவில் புதிய படத்திற்கான பூஜையும் போடப்பட்டது. திரையுலக ஜாம்பவான்களாக ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி படத்தை தொடங்கி வைத்தனர்.
இவ்வளவு நாளும் முன்னணி நடிகையை ஜோடியாக ஒப்பந்தம் செய்யவே புதிய படம் அறிவிப்பு தள்ளிப் போனதாக தகவல்கள் வந்தன. குறிப்பாக நடிகை நயன்தாராவுடன் பேச்சு நடந்ததாகவும், அவர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அடுத்த சுற்றில், தமன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்பட்டது. ஏனோ விளம்பரப் படத்தில் லெஜண்ட் சரவணனுடன் ஜோடி போட்ட முன்னணி நடிகைகள், சினிமாவில் அந்த ரிஸ்கை எடுக்கவில்லை.
எனவே முன்னணி நடிகை பற்றிய அறிவிப்பு இல்லாமல், படத்திற்கு பூஜை போடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் கீதிகா திவாரி என்கிற புதுமுகம், லெஜண்ட் சரவணன் ஜோடியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னணி நடிகை ஒருவர் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் படக் குழுவினர் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். ட்விட்டரிலும் இன்று ‘லெஜண்ட் சரவணன்’ என ட்ரெண்ட் செய்தனர்.
தொடக்க நிகழ்வில் நடிகர்கள் பிரபு, விவேக் உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்கள் உள்பட வேறு சில முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க இருக்கிறார்கள். விளப்பர பட இயக்குனர்களான ஜேடி அண்ட் ஜெர்ரி படத்தை இயக்குகிறார்கள். லெஜண்ட் சரவணன் நிறுவனமே படத்தை தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சென்னை, கோவை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் வெளிநாடுகளின் முக்கிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.
ரஜினி அரசியலுக்கு போவதால் சினிமாத் துறையில் வெற்றிடம் விழுந்திருப்பதாக கணக்குப் போட்டு வருகிறாரோ லெஜண்ட்?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.