Sarkar Review: தீபாவளி விருந்தாக வெளிவந்த சர்கார் திரைப்படம், சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்ததா? ஐஇ தமிழ் தரும் முதல் ரிவ்வியூ இங்கே:
சர்கார்... அமெரிக்காவில் இருக்கும் உலகின் நம்பர்.1 சாஃப்ட்வேர் கம்பனியில், நம்பர்.1 பொசிஷனில்(சிஇஓ) தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பதவி வகிக்கிறார். போட்டியாளர் என்று எந்த நிறுவனம் வந்தாலும், அதை ஒன்றும் இல்லாமல் போகச் செய்யும் வித்தைக்காரன் இந்த சுந்தர். மற்ற நாடுகளுக்கு தேடித் தேடிச் சென்று போட்டியாளர்களை அழித்துவிட்டு திரும்பும் அளவிற்கு மெகா கார்ப்பரேட் மான்ஸ்டர். ஆனால், உலகில் எந்த இடத்தில் இருந்தாலும், ஓட்டு போடுவதற்கு மட்டும் தவறாமல் தமிழகத்திற்கு வந்துவிடுவார்.
அப்படி ஓட்டு போடுவதற்காக இந்தியா வரும் சுந்தரின் ஓட்டை கள்ள ஓட்டாக வேறொருவர் போட்டுவிட, அந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை, தனது அதிகார பலத்தால் நிறுத்து வைக்கிறார். பிறகு, நீதிமன்றம் சென்று, அதே தொகுதியில் அதே தேர்தலில் ஓட்டு போடும் உரிமையை மீண்டும் சுந்தர் பெற, தமிழகம் முழுவதும் இந்த ஜூரம் பற்றிக் கொள்கிறது.
இப்படி, எங்கள் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டார்கள் என்று லட்சக்கணக்கில் புகார் வர, தேர்தலையே மீண்டும் நடத்த உத்தரவிடுகிறது நீதிமன்றம். இதனால், தமிழக முதல்வரின் எதிர்ப்பையும், அவரது மகளின் எதிர்ப்பையும் சம்பாதிக்கும் விஜய், ஒருக் கட்டத்தில் 234 தொகுதிகளிலும் அவரே வேட்பாளர்களை நிறுத்தி, மக்கள் நீதிக்காக போராடி வெல்கிறார்.
துப்பாக்கியில் கிளாஸ் விஜய்... கத்தியில் மாஸ் விஜய்.... சர்காரில் கிளாஸ் + மாஸ் விஜய் என்று சொல்லலாம்... முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.
ஆனால்,
இது முருகதாஸ் படம் தானா? என்ற சந்தேகம் நமக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. விஜய்யை 'கார்ப்பரேட் மான்ஸ்டர்' என்று வசனம் மூலம் மட்டுமே கன்வே செய்திருப்பதால், விஜய் எவ்வளவு பெரிய புத்திசாலி, திறமைசாலி என்பதை நாமாகவே நமது இஷ்டத்துக்கு கற்பனை செய்து கொள்கிறோமே தவிர, அதனை சீன் மூலம் சொல்லாமல் விட்டது முதல் மைனஸ்.
முதல் பாதியில் மக்களை விஜய் தூண்டிவிடும் காட்சி, பார்க்க நன்றாக இருந்தாலும் நம்பும் படி இல்லை. பழ.கருப்பையா மற்றும் ராதா ரவியை பயன்படுத்திக் கொண்ட விதம் போதுமா என்பதை முருகதாஸ் தான் விளக்க வேண்டும்.
விஜய்க்கு மாஸ் கொடுக்க நினைத்தது ஓகே தான். அதற்காக, முன்னோக்கி செல்லும் தமிழ் சினிமாவில், தெலுங்கு பட ஸ்டண்ட்ஸ் தேவையா? புவி ஈர்ப்பு விசைக்கு கொஞ்சம் கூட ஒத்துவராத ஸ்டண்ட்ஸ்-லாம் இன்னும் எத்தனை நாளைக்கு? அதுவும் முருகதாஸ் படத்தில் இப்படியா என்று நினைக்கும் போது தான் கடினமாக உள்ளது.
பாடல்களில், சிம்டாங்காரன் மற்றும் ஒரு விரல் புரட்சி பாடலில் தியேட்டரில் விசில் பறக்கிறது. படத்தில் இப்படி சில அதிருப்திகள் இருந்தாலும், மக்களின் மண்டையில் ஏறும்படி நச்'சென்று மெசேஜ் சொல்லி இருப்பதற்காகவே சர்கார் படத்தை குடும்பத்தோடு ரசிக்கலாம்.
அதுவும், 'பிரச்சனை நடந்தா மக்கள் அதை வாட்ஸ் ஆப்-ல் ஷேர் பண்ணுவாங்க, அவங்க அடுத்தவங்களுக்கு பண்ணுவாங்க.. அவங்க அடுத்தவங்களுக்கு ஷேர் பண்ணுவாங்க... அப்புறம் அதை விட்டுட்டு அடுத்த பிரச்னைக்கு போயிடுவாங்க" போன்ற டயலாக்லாம் சிம்பிளாக இருந்தாலும், நம்மை நிச்சயம் யோசிக்க வைக்கும்.
'உனக்கு ஓட்டு போடா காசு வான்குனேன்ல... என் கையிலயே அடி' என்று ஒருவர் சொல்லும் வசனம், தியேட்டரில் பெரும்பாலானோரை தலை குனிய வைக்கிறது. இப்படி அழுத்தமான பல மெசேஜ்கள் படத்தில் உள்ளன.
விஜய்க்கு அடுத்தபடியாக படத்தின் பலம் வரலக்ஷ்மி சரத்குமார் தான். இரண்டாம் பாதியில் அவர் இல்லையென்றால், படமே இல்லை. ஒரே எக்ஸ்பிரஷன் தான்... ஆனால், அது சீனுடன் கரெக்டாக சிங்க் ஆகிறது. மூத்த அரசியல்வாதிகளே எதிர்கொள்ள தயங்கும் விஜய்யை, இளம் தலைவராக மிரட்டும் தொனி சூப்பர்ப் வரு.
அதிலும், முதல்வரான அப்பா பழ.கருப்பையாவுக்கு மாத்திரை கொடுக்கும் சீன் செம..
சர்கார் ஆடியோ லான்ச் விழாவில் பேசிய விஜய், 'வரலக்ஷ்மி படத்துல வராங்க-னு சொன்னாங்க...வர லக்ஷ்மிய ஏன் தடுக்கணும்... வரட்டும்'னு சொன்னார். நீங்க படம் பார்க்கும் போது, இரண்டாம் பாதியில் அந்த உண்மையை உணர்வீர்கள்.
மற்றபடி, யோகிபாபு இருக்கார்... அவ்வளவு தான். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை நன்றாக உள்ளது.
ஒட்டுமொத்தமாக, 'ஒரு விரல் புரட்சி' எனும் தாரக மந்திரத்தை மக்களுக்கு மீண்டும் உணர்த்திய மற்றொரு மேலோட்டமான அரசியல் படமாக சர்கார் அமைகிறான்.
விஜய் பக்தர்களுக்கு நிச்சயம் இப்படம் பிடிக்கும்... நார்மல் ஆடியன்ஸ் ஒருமுறை ரசிக்கலாம்... விஜய்க்காக.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.