Sarkar Review 2: விஜய்... விஜய் மட்டுமே பிளஸ்

Sarkar Tamil Movie Review: நடிகர் விஜய், மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

ஜனார்தன் கெளசிக்: 

Sarkar Review: விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளியன்று வெளியாகியிருக்கும் சர்கார் படம் குறித்து ஐஇ தமிழ் பிரத்யேகமாக வழங்கும் 2-வது விமர்சனம் இது:

அரசியல் கதை தான் இப்பொழுது தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். நோட்டா, அண்ணனுக்கு ஜே என்று லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். அந்த வரிசையில் மற்றுமொரு அரசியல் படம் தான் தளபதி விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’.

எப்பொழுதும் போல, விஜய் படம் ரிலீஸாவதற்கு முன் எங்கிருந்தாவது பிரச்னை கிளம்பும். சென்ற படத்தில் மத்திய அரசை விமர்சித்ததற்காக பெரும் போராட்டம் வெடித்தது, அது படத்திற்கு நல்ல விளம்பரத்தையும் ஈட்டியது. இந்த படத்திலோ, பிரச்னை வெளியில் இருந்து வரவில்லை. சர்கார் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் பிரச்னை எழுப்பி, அதில் வெற்றியும் பெற்றார். இந்தக் கதைக்கு ராஜேந்திரனும் பங்கு அளித்துள்ளார் என்ற அறிவிப்புடன் தான் தொடங்குகிறது சர்கார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள கேசினோவில் ஸ்டைல்லாக சிகரெட்டை பிடித்தபடி என்ட்ரி தருகிறார் விஜய். அங்கே ஒரு பாட்டுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். ஜி.எல் நிறுவனத்தின் டைரக்டராக சுந்தர் ராமசாமியாக நமக்கு அறிமுகம் ஆகிறார் விஜய். உங்களுக்கு கஜினி படத்தின் வரும் சஞ்சய் ராமசாமி நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல (இருவருமே பெரிய தொழில் அதிபர்கள், சுத்தி பாடி கார்ட்ஸ் எப்பொழுதும் இருப்பார்கள்). சுந்தர் வந்தால் மற்ற கம்பெனிகளை திவால் ஆக்கிவிடுவார், அவர் வந்தால் அதை செய்து விடுவார் என்று எம் ஜி ஆர் படத்தில் அவர் தோன்றுவதற்கு முன்பு பில்ட் அப் செய்வது போல் இந்தியாவின் அனைத்து கம்பெனிகளும் அஞ்சி நடுங்கும் ஒரு ஆளாக விஜய் திகழ்கிறார்.

அவர் அமெரிக்காவில் இருந்து சென்னை வருவது நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் தன் ஓட்டை பதிப்பதற்கு தானே தவிர வேறு எதற்கும் இல்லை என்று கூறுகிறார். வந்த இடத்தில் அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட, அவரது ஒட்டு கள்ளஓட்டாக விழுந்துவிடுகிறது. அமெரிக்காவில் இருந்து வந்து ஒட்டு போடமுடியவில்லையே என்று எண்ணும் சுந்தர் இந்திய அரசியல் சாசனத்தில் இருக்கும் 49பி (ஒரு வாக்காளர் தனது வாக்கினை வேறு ஒருவர் தவறாக உபயோகபடுத்திவிட்டார் என்று எண்ணினால், தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து, மீண்டும் அவர் வாக்களிக்க கோர்ட்டில் முறையிட முடியும்). இதை வைத்து விஜய் மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இது போல் தங்கள் ஓட்டை இழந்த மற்ற மக்களையும் அவர் அணியில் சேர்க்கிறார், மீண்டும் தேர்தலை நடக்க வைக்கிறார். இங்கு தொடங்கும் இவருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே ஆன யுத்தம் படம் முழுக்க தொடர்கிறது. இறுதியில் சுந்தர் எப்படி ஆளும் கட்சியை பதவியில் இருந்து நீக்கி தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறார் என்பதே சர்கார்.

படத்தில் மிக பெரிய பிளஸ் விஜய், விஜய் மட்டுமே. டான்சில் இப்போதைய தலைமுறை நடிகர்களுக்கு சவால் விடுகிறார். கருத்து சொல்வதில், எந்த வித பயமும் இன்றி முந்தைய தலைமுறை நடிகர்கள் செய்யாததை செய்து காட்டுகிறார். சண்டை காட்சிகளில் சும்மா மிரட்டுகிறார் மனுஷன். ஆனால், சில இடங்களில் நமக்கு விஜய்யின் நடிப்பு கொஞ்சம் செயற்கையாக தோன்றுகிறது. நாயகியாக வரும் கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவின் நடிகைக்கான பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார் – பாடலுக்கு நடனம் ஆடுவது, சம்மந்தமே இல்லாமல் காதல் வசனம் பேசுவது, ஹீரோவுடன் படம் முழுக்க நடப்பது.

சில காட்சிகளில் தோன்றினாலும், யோகி பாபு சிரிப்பை வர வைக்கிறார். படத்தின் மற்றுமொரு பிளஸ் – வரு சரத்குமார். தனது பார்வையிலும், குரலிலும் கம்பிரமாக தோற்றம் அளிக்கிறார். இவரது நடிப்பு பல இடங்களில் படையப்பா நீலாம்பரியை நினைவுபடுத்துகிறது. ஆனால் இவருக்கான நேரம் திரையில் கம்மியாக உள்ளது.

படத்தின் மைனஸ் – இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். துப்பாக்கி, கத்தியை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கும் இவர், இந்த படத்தில் தனது மேஜிக்கை சீராக பயன்படுத்த தவறியிருக்கிறார்.

படத்தின் கதை நமக்கு நல்ல அறிமுகமானது தான் என்றாலும், அதில் விறுவிறுப்பு கூட்டுவது அதன் திரைக்கதை தான். அதில் கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர். அங்கங்கே அவரின் ‘Trade Mark’ விஷயங்கள் படத்தில் இருக்கின்றன (விவசாய பிரச்னை, கம்யூனிச கருத்துக்கள் – கத்தி படத்தில் இட்லி என்றால், இங்கே தக்காளியை கையில் எடுத்திருக்கிறார்). ஆனால் முழுப்படத்தில் தனது முத்திரையை பதிக்க தவறி விட்டார் முருகதாஸ்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பழ கருப்பையா மற்றுமொரு பெரிய ஏமாற்றம். பாதி வசனம் அவர் லிப் சிங்க் மிஸ்ஸாகி பேசுகிறார், அவரது மீதி வசனத்தில் பீப் போட்டு விடுகிறார்கள். அங்காடி தெருவில் மிரட்டியதில் இதில் கால் பங்கு கூட இல்லை.

ஏ.ஆர்.ரகுமானின் இசை இதில் நம்மை ஈர்க்க தவறுகிறது. ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் தவிர, மற்ற எதுவுமே நம் மனதில் நிற்கவில்லை. பின்னனி இசையும் சுமார் ரகம்தான். மொத்தத்தில் சர்கார், துப்பாகியில் இருந்த பரப்பரப்பு, கத்தியில் இருந்த சுவாரசியம் என்று எதுவும் இல்லாமல், விஜய்யின் ஆளுமையால் பிழைக்கின்றது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close