அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரின் பயோகிராபியை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு வாழ்வியலைச் சொல்லும் தரமான படைப்புகளாக இருக்கும். வெற்றிமாறன் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்றவை. மேலும், விருதுகளையும் வென்று குவித்தவை.
இதையும் படியுங்கள்: ட்விட்டரில் ஃபகத் ஃபாசில் ட்ரெண்டிங்: ஜாதிப் பெருமை பாடல்களை இணைத்து பகிரும் நெட்டிசன்கள்
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்து வருகின்றனர். விடுதலை படத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டை மையமாக வைத்து சூர்யா நடிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இதற்கு அடுத்தபடியாக தனுஷின் வடசென்னை 2 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், விஜய், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கும் கதை சொல்லி உள்ளார்.
அடுத்தடுத்து திரைப்பட பணிகளால் பிசியாக இருக்கும் வெற்றிமாறன் மேலும் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அது ஒரு பயோபிக் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், சமீபகாலமாக பரபரப்புக்கு பஞ்சமில்லாத அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரின் பயோபிக்கை இயக்குனர் வெற்றிமாறன் படமாக எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலை சவுக்கு சங்கரே ஒரு பேட்டியில் உறுதிபடுத்தி உள்ளார். தற்போது கிடைத்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த பயோபிக்கில் சவுக்கு சங்கராக தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப்பேட்டியில் சவுக்கு சங்கரிடம் பயோபிக் படம் குறித்து கேட்டதற்கு, நானும் வெற்றிமாறனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷும், வெற்றிமாறனும் கூட்டணி சேர்ந்தாலே வெற்றிப் படமாகத்தான் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அதுவும் சவுக்கு சங்கர் வாழ்க்கை வரலாறு என்பதால் இந்தப் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.
சவுக்கு சங்கர் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றியவர். அதிகாரிகளுக்கும் முக்கிய புள்ளிகளுக்கும் இடையிலான தொலைப்பேசி உரையாடல் பதிவை கசிய விட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். பின்னர் சவுக்கு என்ற அரசியல் இணையதளத்தை நடத்தினார். தொடர்ந்து யூடியூப் சேனல்களிலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.