பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், எஸ்.பி.பி-யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய உடல் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பாடகர் எஸ்.பி.பி கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திங்கள், இசை உலகத்தினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இளமையான இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் 16 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடலைப் பாடியுள்ளார். 6 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். பத்மஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். அவருடைய மறைவால் லட்சக் கணக்கான ரசிகர்கள் துயரத்தில் உள்ளனர்.
பாடகர் எஸ்.பி.பி-யின் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, எஸ்.பி.பி-யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு எஸ்.பி.பி-யின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி, பத்மஸ்ரீ-பத்மபூஷண் விருதுகள் பெற்ற #SPBalasubrahmanyam அவர்களின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற @CMOTamilNadu ஆவன செய்ய வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) September 25, 2020
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி, பத்மஸ்ரீ-பத்மபூஷண் விருதுகள் பெற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற
ஆவன செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்.பி.பி-யின் உடல் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டு தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும். #SPBalasubramaniam
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 25, 2020
இந்த நிலையில், பாடகர் எஸ்.பி.பி-யின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய உடல் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.