நடிகர்கள் விஜய் சேதுபதி- மகா காந்தி இருவரும் பரஸ்பரம் மோதிக் கொண்ட விவகாரத்தில், கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிரபல திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரு விமான நிலையம் சென்ற போது இவருக்கும் சக நடிகர் மகா காந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விமான நிலையத்தில் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடிகர் மகா காந்தி விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வழக்கு விசாரணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், தன் மீதான கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
கடந்தாண்டு வழக்கு விசாரணைக்கு வந்த போது, இருதரப்பும் பரஸ்பரம் பேசி தீர்வு காணும்படி உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று (ஜன.5) வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக பேசி தீர்க்க அறிவுறுத்தப்பட்டதே? அது என்ன ஆனது என்று கேட்டனர்.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறினார்கள். மேலும் இந்த விவகாரத்தில் தன்னை குறித்து எதிர்தரப்பினர் தான் அவதூறு பரப்பியதாக விஜய் சேதுபதி தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் விஜய்சேதுபதியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் அவதூறு வழக்கை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் எதிர் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் எதுவும் செய்ய முடியாது. கிரிமினல் அவதூறு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் சந்திக்க விஜய் சேதுபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“