அருள்மொழிச் சோழர், பிரபாகரன் வரலாற்றுப் படங்கள்: வெற்றிமாறன் இயக்க ஏற்பாடு

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழன் இந்து மன்னனாக காட்டப்பட்டுள்ளார் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

அருள்மொழிச் சோழர், பிரபாகரன் வரலாற்றுப் படங்கள்: வெற்றிமாறன் இயக்க ஏற்பாடு

அரசன் அருண்மொழி சோழன் மற்றும் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் ஆகியோரின் வாழக்கை வரலாறு பற்றிய திரைப்படங்களை எனது தயாரிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்குவார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் தமிழ் தேசிய விடுதலை போராளியான வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழத்தமிழர்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர். இவரின் வாழக்கை வரலாற்றை மையமாக வைத்து ஏற்கனவே மேதகு என்ற படம் 2 பாகங்களாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழன் இந்து மன்னனாக காட்டப்பட்டுள்ளார் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வெற்றிமாறன் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மன்னர் அருண்மொழி சோழன் மற்றும் தமிழ் தேசிய விடுதலை போராளி பிரபாகரனின் வாழக்கை வரலாற்று படத்தை எனது தயாரிப்பில் தம்பி வெற்றிமாறன் இயக்குவார் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,

தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும் என பதிவிட்டுள்ளார்.

சீமானின் இந்த அறிவிப்பு வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் இந்த அறிவிப்புக்கு தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Seeman produce arunmozhi chozhan and prabakaran biographic movie

Exit mobile version