சீமராஜா படத்திற்கு ‘ரிவ்வியூ’ அவ்வளவு சூப்பராக இல்லை. ஆனால் தியேட்டர்களில் கலெக்ஷன் அள்ளுகிறது. காரணம், சிவகார்த்திகேயனை குடும்பமாக சென்று ரசிக்கலாம் என அவர் சம்பாதித்திருக்கும் பெயர்! அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக விஜய், அஜீத், சூர்யா என ஆரம்பித்து சிம்பு வரை பலரும் மோதிக்கொண்டிருக்க, ஓசைப்படாமல் அந்த இடத்தை சிவகார்த்திகேயன் தட்டிச் செல்வதாக கூறுகிறார், விமர்சகர் திராவிட ஜீவா. அவரது அலசலை இங்கு வாசியுங்கள்!
திராவிட ஜீவா
இந்திய அளவில் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், 1980-களுக்கு முன்பு வரை தமிழிலிலும் நம்பர் ஒன் இடமென்பது சிறப்பானதாக எல்லாம் இல்லை. சில நேரங்களில் சிலர் வந்து நம்பர் ஒன்னாக இருப்பர். திடீரென்று காணாமல் போவர். யாரும் நம்பர் ஒன்னாக தொடர்ந்து உச்சத்தில் இருந்தது இல்லை என்பது அலசி ஆராய்ந்தால் உண்மையென்பது புலப்படும்.
ஹிந்தியில் ராஜேஷ்கண்ணா, தர்மேந்திரா, அமிதாப், போன்றவர்களின் வரிசை அப்படியே! தமிழில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோரால் எம் ஜி ஆர், சிவாஜி கிராப் ஏறிதான் இறங்கியுள்ளது. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், திலீப், பிருத்திவிராஜ், தெலுங்கில் சிரஞ்சீவியின் வரிசை மகேஷ்பாபு, ஜூனியர் என் டி ஆர் போன்றோரால் தடுமாறியது தெரிந்ததே.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிரீடப்பெயர்களை சூட்டி அவர்தம் ரசிகர்களும் அகமகிழ்ந்தனர். ஆனால் தமிழகத்தில் 40 வருடங்களாக 1980-ல் தீபாவளிக்கு வெளிவந்த முரட்டுக்காளை திரைப்படத்தின் சரித்திர வெற்றியில் தொடங்கிய சாதனை தமிழ் சினிமாவின் தற்போதுவரை அசைக்கமுடியா சூப்பர்ஸ்டாராக ரஜினிகாந்த் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. அப்படி மறுப்பார்களாயின் அவர்கள் நடுநிலைதன்மையை கேள்விக்குறியதாக்கிவிடும்.
ரஜினிகாந்த் 40 வருட சூப்பர் ஸ்டாராக பட்டத்துடன் இல்லை. அவரின் வெற்றி சூப்பர் ஸ்டார் என்பதை ஒரு திரையுலக முதலமச்சர் பதவி போலாக்கிவிட்டது. கடந்த இரண்டு மாமாங்கமாக அதாவது 20 வருடமாக அடுத்த சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்துக்காக பல நடிகர்களின் கனவும் நினைவும் அதைச்சுற்றியே இருக்கின்றது.
ஆனால் சும்மா கிடைக்குமா சூப்பர் ஸ்டார் பட்டமும் பதவியும். ரஜினியே நினைத்த்துக்கூட பார்த்திருக்க முடியாத இடமிது. அவரின் வெற்றியும், நிதானமும், உழைப்பும் மட்டுமல்ல ஒரு வித ஈர்ப்பும் இருந்தாலொழிய இவ்விடம் யாருக்கும் சாத்தியமாகாது. அதாவது ஒரிரு பட வெற்றியோ, ரசிகர்களின் ஆதரவு மட்டுமே அவரை சூப்பர் ஸ்டாராக்கவில்லை.
அவரின் தோல்வியைக்கூட மக்கள்... அதாவது வெறும் ரசிகர்கள் அல்ல, மக்கள் மற்ற நடிகர்களைவிட மிக உயரத்தில் வைத்துள்ளனர் என்பதும் கண்கூடாக அவரின் பாக்ஸ் ஆபீஸ் பயரில் தெரியும். அவ்விடம் அனைவரையும் ஏங்கவைக்கும் என்பதும், இன்னும் சொல்லப்போனால் நடிகர்களின் உச்சகட்ட கனவே ஒரு முறையாவது அந்த இடத்தை பிடிப்பது என்ற ஆவல் இருக்கத்தான் செய்யும்.
சூப்பர் ஸ்டார் பெயரை தாங்க்கும் நிலை என்பது பனங்காய்க்குருவி அல்ல, பாறாங்கல்லை தாங்கும் நிலை என்பதை உணர்ந்தாலும் அதற்கு ஆசைப்படாமல் இருக்கமுடியவில்லையே பாலகுமாரா ரேஞ்சில் இருக்கத்தான் செய்வர். அது யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காது என்று இலவம் காத்தகிளிகள் தெரிந்து கொண்ட பின்பு, ‘சீச்சி இந்தப்பழம் புளிக்கும்’னு கதை சொல்லிக்கொண்டிந்தனர்.
இந்த நேரத்தில், கருப்பு மின்னலாய் ஜாம்பவான்கள் இருக்கும்போது கதவை திறந்த சூப்பர்ஸ்டாரைப் போன்று மெல்லிய தென்றலாய் இருந்த சிவகார்த்திகேயன் கடந்த இரண்டு வருடமாக சூறாவளியாக சுழன்றடிக்கிறார். ‘வாவ்... கெட் ஒன் மோர் ரஜினி’ என்று விநியோகஸ்தர்கள் அகமகிழ்ந்து உள்ளது அக்மார்க் உண்மை.
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்ணனி நடிகர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் சர்வ வல்லமை படைத்த அசகாய சூரர்கள் போன்று காட்சியளித்தாலும் கள நிலவரம் கலவரமாகவே உள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் சினிமா கிராப் ஆரம்பகால ரஜினியைப்போன்று நிலையாக நின்று அடித்து ஆடும் தோனியை நினைவுபடுத்துகின்றார்.
ஆரம்பகாலத்தில் மிக நிதானமாக விஜயகுமார், சிவாஜி, கமல் போன்றோரை ரஜினி வீழ்த்தி நிலைத்தது போன்று தற்போது விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்றவர்களை படிப்படியாக இதுவரை வியாபாரரீதியிலும், கலெக்ஷன் ரீதியிலும் தொய்வே இல்லாமல் சிகா வீழ்த்தியுள்ளது உண்மை.
ஏற்கெனவே ரெமோ படவியாபாரம் அஜித், சூர்யாவை மிஞ்சியதும், வேலைக்காரன் வியாபாரம் விஜய்யை நெருங்கியதும், விஜய்... முருகதாஸ் துணையுடன் சன்பிக்சர்ஸில் தஞ்சம் அடைந்ததும் சினிமா அரசியல். வெளியில் ரஜினியுடன் போட்டி என்று சொல்லிவிட்டு சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்பட வசூலை விஜய் தரப்பு வைத்த கண்வாங்காமல் பார்க்கவைத்தது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியல்லாமல் வேறில்லை.
முன்ணனி நடிகர்கள் மிக அதிகமாக நான்கு நாள் விடுமுறை அல்லது தீபாவளி பொங்கல் விடுமுறை நாளை குறிவைப்பது அவர்களின் இயலாமையே. ஆனால் சிவகார்த்திகேயன் ரஜினியைப் போன்று சாதாரண நாளில் படம் வெளியாவது குறித்தும் அலட்டிக் கொள்வதில்லை.
தொடர்விடுமுறை நாளையும் குறிவைப்பதில்லை. ஆனாலும் மக்கள் ஆதரவு என்பது அனைத்துப் படத்திற்க்கும் தொடர்வது திரையுலகை மட்டுமல்ல ரசிகர்களையே ஆச்சர்யபடவைத்துள்ளது. வருத்தப்படாத வாலிபர்சங்கம் ஆர்டினரியாக வந்து அசாத்திய வசூலை அள்ளியது. தாமதமாக அல்ல, மிக தாமதமாக பலமுறை தேதி அறிவித்து ரஜினிக்கே பெரும் வெற்றியைக் கொடுக்காத சினிமா, ரஜினிமுருகன்- ல் சிவகார்த்திகேயனுக்கு இலகுவாக கொடுத்தது.
முன்ணனி இயக்குநர், பெரிய தயாரிப்பு நிறுவனம் எதுவும் இல்லாமல் ரெமோவை கலக்ஷனில் அதிரடி அந்நியனாக வெற்றிபெற வைத்தார். வேலைக்காரன் மிகப்பெரிய வியாபாரம், ஆனாலும் யாரையும் புலம்பவைக்கவில்லை. சீமராஜா 20 வருட அனுபவ கமர்ஷியல் ஹீரோக்கள் செய்யவேண்டியது! ஆனால் அசால்ட்டாக ஹவுஸ்புல் ஆகபோவது அசாதாரணமே.
துணை நடிகராக ரஜினியைப்போல் பொருளாதார பின்ணனி இல்லாமல், அசாத்திய அழகு போன்ற அம்சங்கள் இல்லாமல் சினிமாவில் சாதாரண சாமானியனின் வெற்றியாக சிவகார்த்திகேயனின் வளர்ச்சி இருக்கின்றது என்று சொன்னால் மறுப்பதற்கு மறுவார்த்தையில்லை. சீமராஜ சினிமாவுக்கு சின்னராஜாவை கொடுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.