scorecardresearch

இனிமேல் டைவர்ஸ் அது இதுன்னு சொல்லுவீங்க.. அனைத்து புரளிக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஷபானா!

ஷபானா, ஆர்யன் இருவரும் விவாகரத்துக்கு நெருங்கி விட்டதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியானது. ஆனால் இதுகுறித்து இருவருமே எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தனர்.

shabana
Sembaruthi Shabana put an end to the divorce rumor

சமீப காலங்களில் டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. ஆர்யன் – ஷபானா, ரேஷ்மா – மதன்பாண்டியன், சித்து-ஸ்ரேயா, பிரவீன் தேவசகாயம்-ஐஸ்வர்யா என கடந்த சில நாட்களில் மட்டும் இத்தனை சின்னத்திரை ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். 

ஷபானா-ஆர்யன் திருமணம் கூட இப்படித்தான். செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக முதலில் நடித்தவர் கார்த்திக்ராஜ். இவர்களின் ஜோடி மக்களின்  விருப்பமான ஜோடியாக இருந்தது. இருவரும் காதலித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புரளி கிளம்பியது. ஆனால் இதை இருவரும் ஏற்கவில்லை.

இந்நிலையில் ஷபானாவும், பாக்கியலெட்சுமி சீரியலில் செழியனாக நடிக்கும் ஆர்யனும் காதலிப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதனை ரசிகர்கள் நம்பவில்லை. வழக்கம்போல் இதுவும் புரளியாக இருக்கும் என நினைக்கும் வேளையில், இருவரும் சமூகவலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், சமீபத்தில் திடீரென நடந்து முடிந்தது.

ஷபானா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர், ஆர்யன் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   இதனால் இருவரும் பெற்றோர் சம்மதமில்லாமல், திடீரென திருமணம் செய்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து நடந்த ரேஷ்மா-மதன்பாண்டியன் கல்யாணத்திலும் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர்.

இந்நிலையில் மணமான ஒரு மாதத்துக்குள்ளே இவர்கள் குடும்ப வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியதாகவும், ஷபானாவை ஏற்றுக்கொள்ளாத ஆர்யனின் வீட்டார், அவனை விட்டு விலகும்படி ஷபானாவை மிரட்டுவதாகவும், இருவரும் விவாகரத்துக்கு நெருங்கி விட்டதாகவும் ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியானது.  

ஆனால் இதுகுறித்து ஷபானா, ஆர்யன் இருவருமே எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தனர். பிறகு ஒன்றாக இன்ஸ்டாகிராமில் போட்டோ போடுவதையும் நிறுத்தினர்.

இப்படி இருக்க, ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவித்துதான் வந்திருப்போம், பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் உள்ளது, சிலர் பிரியமான ஒருவரை இழந்திருக்கலாம் என்று பதிவு செய்திருந்தது, மேலும் குழப்பத்தை உண்டாக்கியது.

இதனால் இந்த செய்திகள் அனைத்தும் உண்மையாக இருக்கலாம் என ரசிகர்கள் பலரும் சந்தேகிக்க ஆரம்பித்தனர். பாவம், கல்யாணம் முடிந்து ஒரு மாதத்துக்குள் ஷபானாவுக்கு இப்படி ஒரு நிலைமையா என வருத்தத்தையும் தெரிவித்தனர்.

இப்படி ஒரு நிலையில், ஷபானாவின் இன்ஸ்டாகிராம் பதிவு அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. அதில், கிறிஸ்துமஸ் அன்று, ஷபானா, ஆர்யனுடன் சேர்ந்து எடுத்த போட்டாவை பகிர்ந்து, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

மேலும் ஜனவரி 2ஆம் தேதி பகிர்ந்த மற்றொரு போஸ்டில், ஷபானா தன் நண்பர்களுடன் சேர்ந்து, வெளியே எங்கோ அவுட்டிங் சென்றபோது, ஆர்யனுடன் வீடியோ காலில் பேசுவது போன்ற வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதன்மூலம் ஷபானா இவ்வளவு நாட்களுக்கு பிறகு, விவகாரத்து குறித்து வதந்திக்கு, ஒட்டுமொத்தமாக சேர்த்து ஒரு பெரிய முற்றுப்புள்ளியை வைத்துள்ளார். இதனால் ஷபானாவின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sembaruthi shabana put an end to the divorce rumor