சன் டிவி சீரியல் நடிகரும் கன்னி மாடம் திரைப்பட இயக்குனருமான போஸ்வெங்கட் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்பமனு அளித்துள்ளார். அதோடு, அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அண்மையில், திமுக தலைமை தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்ரவரி 24ம் தேதி வரை விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தது. விருப்பமனு விண்ணப்பக் கட்டணம் ரூ.25,000 என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 4,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் விருப்பமனு பெற்றுள்ளதாகவும் 500க்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில், சீரியல் நடிகரும் திரைப்பட இயக்குனருமான போஸ் வெங்கட்டும் விருப்பமனு அளித்துள்ளார்.
தமிழக அரசியலில் சினிமா துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது என்பது வாடிக்கையான விஷயமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், சன் டிவி சீரியல் நடிகரும் கன்னி மாடம் திரைப்பட இயக்குனருமான போஸ் வெங்கட், வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனு தாக்கல் செய்தார்.
நடிகர் போஸ் வெங்கட்
திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த போஸ் வெங்கட் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தொடர்ந்து பல்வேறு காரணங்களால் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு சென்ற நிலையில் இந்த முறை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில், ஒருவேளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெறுவேன். நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் 5 ஆண்டுகளும் சினிமாவில் நடிக்க மாட்டேன். சென்னைக்கு வரமாட்டேன், தொகுதிக்காக முழுமையாக பாடுபடுவேன்” என தெரிவித்தார்.
முன்னதாக, இயக்குனர் போஸ் வெங்கட் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"