சித்ரா மரணம்… ஹேமந்தை சுற்றும் சந்தேக வலை? உதவியாளர் சலீம் ஷாக் வாக்குமூலம்

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் தற்போது வரை குழப்பம் நீடித்து வரும் நிலையில், அவருடைய உதவியாளர் சலீம் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சின்னத்தரையில் தனது வெகுளியான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவர் நடித்த முல்லை என்ற கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காக சென்ற அவர் அடுத்த நாள் காலை தனியார் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மரண வழக்கு தொடர்பாக சித்ராவின் காதல் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் சித்ராவின் மரணம் கொலையா, தற்கொலையா? வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் சித்ரா இறந்து 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த வழக்கில் போலீசார் இதுவரை முழுமையான விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்டிஓ விசாரணையும் வேகமாக முடிக்கப்பட்டு, சித்ரா தற்கொலை செய்துகொண்டதற்கு வரதட்சணை காரணம் இல்லை என விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதில் சித்ராவின் தாயார் தனது மகள் சித்ராவின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சித்ராவின் தீவிர ரசிகராக அறிமுகமாகிய சலீம் என்பவர் சித்ராவின் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். சித்ரா ஷூட்டிங்கிற்கு சென்றால் கூடவே செல்லும் சலீம், அங்கு நடக்கும் நிகழ்வுகளை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து அந்த புகைப்படங்களை சித்ரா தனது சமூக வலைதள பக்கங்களில் அப்டேட் செய்ய பயப்படுத்திக்கொள்வார்.

ஆனால், சித்ராவின் வாழ்க்கையில் ஹேமந்த் வந்த பிறகு சலீமிடம் கடுமையாக நடந்துகொண்டுள்ளார். மேலும் அவரை சித்ராவிடமிருந்து விரட்ட எண்ணிய ஹேமந்த் சலீமின் செல்போனில் இருந்த சித்ராவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்துள்ளார். இது குறித்து சலீம் கூறுகையில், சமீபத்தில், ஹேமந்தும், சித்ராவும் டி நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தபோது, ஹேமந்த் காலையில் 10 மணிக்கு மேலதான் படுக்கையை விட்டு எழுவார்.

வேலைக்கு செல்லாமல் இருந்த அவர், சித்ரா ஷூட்டிங்கு சென்று விட்டால் அடிக்கடி போன் செய்து கொண்டே இருப்பார். மேலும் ஹேமந்த் விரட்டி அடிக்கும்போது கூட சித்ரா ஏன் அமைதியாக இருந்தார் என்பது எனக்கு தெரியவில்லை என கூறினார். ஆனால் சித்ரா மரண வழக்கில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக ஹேமந்த் கூறுகிறார்.

ஆனால், அவரது கழுத்தில் கடுமையான தழும்புகள் எதுவும் இல்லை. மேலும் சம்பவம் நடந்த தனியார் விடுதியில் இல்லாமல் இருப்பது குறித்து எவ்வித விளக்கமும் இல்லை. இதனால் இந்த வழக்கில் உண்மை கண்டறியப்படுமா அல்லது சாதாரண வழக்காக கடந்து சென்றுவிடுமா என்பது பதில் சொல்ல முடியாத கேள்வியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial actress chitra death case chitra assistant revealed hemanth

Next Story
அப்பானா எனக்கு உயிரு… பிக்பாஸ் அனிதாவின் உருக்கமான பதிவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express