சாத்தான்குளத்தில் தந்தை - மகன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த சம்பவம் குறித்து நடிகை ஜனனி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது அண்ணனும் இதே போல இறந்ததாகவும் அவரது உடலைக்கூட பணம் கொடுத்தால்தான் தருவோம் என்று கூறியதை நினைவுகூர்ந்துள்ளார்.
தூத்துகுடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கடையடைப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடந்து, போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஜூன் 22ம் தேதி நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்தனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் போலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டதால்தான் அவர்கள் உயிரிழந்தனர் என்றும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், நடிகர் சூரியா உள்ளிட்டவர்களும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் போலீசாரின் அராஜகம் அதிகரித்துள்ளதாகப் பலரும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் நடிகை ஜனனி, சாத்தான் குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இறந்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்று கூறிய ஜனனி தனது அண்ணனும் இதே போல இறந்ததை தெரிவித்துள்ளார். அப்போது தனது அண்ணனின் உடலை தருவதற்குகூட பணம் கேட்டார்கள் என்பதைக் குறிப்பிட்டு நடிகை ஜனனி கதறி அழுதுள்ளார்.
சாத்தான் குளத்தில் தந்தை மகன் போலீசாரின் தாக்குதலி உயிரிழந்த சம்பவத்தை தனது அண்ணனின் சம்பவத்துடன் நினைவுகூர்ந்து ஜனனி கதறி அழுதுள்ள இந்த வீடியோ காண்பவர்கள் பலரையும் இது போன்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
மேலும், ஜனனி இந்த வீடியோவில் “நான் பொதுவாக டிவி பார்ப்பது கிடையாது. ஆனால், இன்று காலைதான் நான் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வந்தேன். இந்த சம்பவத்தை பார்க்கும்போது எனக்கு அழுகைதான் வந்தது. ஒரு மிருகம் தான் இன்னொரு மிருகத்தை வேட்டையாடும் அதுகூட பசித்தால் தான் இன்னொரு மிருகத்தை வேட்டையாடும். ஆனால், ஒரு மனிதனாக இருந்து இன்னொரு மனிதனை கொல்ல எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது. நான் இவ்வளவு அழுவதற்கு காரணம் இதே போன்ற சம்பவம் என்னுடைய வாழ்விலும் நடந்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு என்னுடைய அண்ணனையும் இப்படிதான் இழந்தேன். அதிலிருந்து எனக்கு போலீசை பிடிக்காமல் போனது. என்னுடைய அண்ணன் உடலைக்கூட பணம் கொடுத்தால் தான் கொடுப்பேன் என்று சொன்னார்கள். அப்போது நான் மிகவும் சின்ன பெண்ணாக இருந்தேன். எனக்கு என்ன செய்வது என்று கூட தெரியாது. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது இதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்” என்று ஜனனின் அனைவருக்கும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகை ஜனனி தற்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் நடித்து வருகிறார். பொதுமுடக்க காலத்தில் படப்பிடிப்புகள் நடத்த முடியாததால், பழைய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.