/indian-express-tamil/media/media_files/2025/08/18/sandhyaraagam-actress-2025-08-18-08-33-24.jpg)
சீரியலில் நல்ல கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் சந்தியா ஜகர்லாமுடி ரெட்நூல் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். சந்தியா ஜகர்லாமுடி, தென்னிந்திய தொலைக்காட்சித் துறையில் தனது அழுத்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஒரு முன்னணி நடிகை. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பிரபலமான தொடர்களில் நடித்துப் புகழ் பெற்ற இவர், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில குறிப்பிடத்தக்க சவால்களையும், சமூக சேவைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
சந்தியா தனது நடிப்பு வாழ்க்கையை 2006-ல் சன் டிவியில் ஒளிபரப்பான 'செல்லமடி நீ எனக்கு' என்ற தொடர் மூலம் தொடங்கினார். இதுவே இவரின் முதல் அறிமுகம். பின்னர் ரம்யா கிருஷ்ணன் நடித்த இந்த மெகா தொடர் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதில், 'பூமிகா' என்ற பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து, தனது தனித்துவமான ஹேர் ஸ்டைல், பேச்சு, மற்றும் உடல் மொழியால் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதையடுத்து இந்த தொடரிலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். பின்னர் மற்றொரு பிரபலமான தொடரான அந்திப்பூக்கள் நடித்ததன் மூலம் தொடர்ந்து தமிழ் தொலைக்காட்சி உலகில் தனது இருப்பை உறுதி செய்தார்.
தமிழ் சீரியல்களைத் தவிர, இவர் தெலுங்குத் தொலைக்காட்சித் துறையிலும் கால் பதித்துள்ளார். தற்போது 'மேகசந்தேசம்' என்ற தெலுங்குத் தொடரில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி மட்டுமின்றி, 'பேய்கள் ஜாக்கிரதை' போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சந்தியா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில துயரமான தருணங்களை எதிர்கொண்டுள்ளார். 2006-ல் 'செல்லமடி நீ எனக்கு' தொடரின் படப்பிடிப்பின்போது, ஒரு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் இவருக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணம் செய்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து அவர் ரெட்நூல் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். சந்தியா ஜகர்லாமுடி, குழந்தைப் பேறு குறித்த தனது தனிப்பட்ட முடிவை உறுதியுடன் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நேர்காணலில், தான் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதற்கான காரணங்களைக் கூறியுள்ளார்.
இன்றைய உலகம் மிகவும் பாதுகாப்பற்றதாக இருப்பதே தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்ததற்கான முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிடுகிறார். திருமணம் முடிந்த பிறகே, குழந்தை வேண்டாம் என்ற முடிவை எடுத்ததாகவும், அதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுக்காமல் இருப்பதன் மூலம், சமூகத்திற்கு தான் பங்களிப்பதாக அவர் கருதுகிறார். மேலும் குழந்தை வந்துவிட்டால் நிறைய கமிட்மன்ஸ் வந்துவிடும் அதற்காகதான் வாழ்க்கை முழுக்க ஓட முடியாது என்று கூறியுள்ளார்.
என்னால் இந்த சமூகத்திற்கு பாபுலேஷன் ஏற வேண்டாம் அதுமட்டுமின்றி என்னால் இந்த உலகத்திற்கு ஒரு உயிர் வர வேண்டாம். குழந்தை இருப்பதால் நிறைய பொறுப்புகள் அதுமட்டுமின்றி பிள்ளைகள் வளர்ந்ததும் தனியாக இருக்கும் சூழல் கூட வரலாம் என்றும் கூறினார். பிள்ளைகள் வந்தால் அதற்காக நான் ஓட வேண்டி இருக்கும். பீஸ் கட்ட வேண்டும், மருத்துவ செலவுகள் என அனைத்திற்கும் ஓட வேண்டி இருக்கும் அதில் எனக்கு விருப்பம் இல்லை என்றார்.
குழந்தைப் பேறுக்கு மாற்றாக, விலங்குகளைப் பாதுகாத்து பராமரிப்பதில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். தனது வீட்டில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் பூனைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த முடிவுக்கு அவரது முன்னாள் கணவர் முழு ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்ததாகவும் தத்தெடுப்பதுகுறித்தும் அவர்கள் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சந்தியா ஜகர்லாமுடி ஒரு சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட முடிவுகள், சமூகப் பொறுப்புணர்வு, மற்றும் விலங்குகள் மீதான அன்பு ஆகியவற்றுக்காகவும் அறியப்படுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.