சபாஷ் மிது: மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் டாப்ஸி!
விளையாட்டுகளைக் கற்றுக்கொள்வதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்பதும், 100 சதவீத முயற்சியுடன் அவற்றைக் கற்றுக்கொள்வேன் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவார்கள்.
Mithali Raj's Biopic: பல மாத யூகங்களுக்குப் பிறகு, கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றில் நடிகை டாப்ஸி நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. ’சபாஷ் மிது’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், விளையாட்டு உலகில் மிதாலியின் பயணத்தை எழுச்சியூட்டும் வகையில் சொல்லும்.
Advertisment
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் மிதாலி ராஜுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் மிதாலி ராஜ்! பல வழிகளில் நீங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள், உங்கள் பயணத்தை திரையில் காட்ட தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே ஒரு மரியாதை. உங்களுடைய இந்த பிறந்த நாளில், என்னால் உங்களுக்கு என்ன பரிசு வழங்க முடியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் சபாஷ் மிதுவில் உங்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன் என்ற வாக்குறுதியை மட்டும் என்னால் தரமுடியும். ’கவர் ட்ரைவ்’ கற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஹேப்பி பர்த்டே கேப்டன்” என்று கூறி, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அதோடு மிதாலியிடம் தான் வாங்கிய ஆட்டோகிராஃபுக்கு லவ் எமோஜியையும் இணைத்து பதிவிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று படத்துக்கான பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாக, முன்னணி ஊடகத்திடம் தெரிவித்திருந்தார் டாப்ஸி. “என்னிடம் வந்த விளையாட்டுப் படங்களின் எண்ணிக்கையை தற்போது நிறுத்திவிட்டேன்! விளையாட்டுகளில் எனக்கு இருக்கும் அன்பைப் பற்றி இப்போது மக்கள் அறிந்திருக்கிறார்கள். விளையாட்டுகளைக் கற்றுக்கொள்வதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்பதும், 100 சதவீத முயற்சியுடன் அவற்றைக் கற்றுக்கொள்வேன் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவார்கள். ஆனால், அவற்றில் சிலவற்றை தான் என்னால் தேர்ந்தெடுக்க முடியும்.
மிதாலி ராஜ் படத்தின் ஒரு பகுதியாக நான் இருக்க விரும்புகிறேன். அதைப்பற்றி இவ்வளவு சீக்கிரம் பேசக் கூடாது. தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகளில் இருக்கிறேன். தவிர மற்றொரு விளையாட்டுப் படத்திலும் நான் நடிக்கிறேன். அதுவும் விரைவில் முறைப்படி அறிவிக்கப்படும்” என அப்போது குறிப்பிட்டிருந்தார் டாப்ஸி.
சச்சின், தோனி வாழ்க்கை வரலாற்றுப் படங்களையடுத்து, இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.