கேரள மாநிலம், திருவல்லாவின் சிறிய ஊரில் இருந்து வந்த நயன்தாரா இன்று தென்னிந்திய திரையுலகையே ஆண்டு வருகிறார். சத்யன் அந்திகாட் இயக்கிய 2003 ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் நயன்தாரா. பிறகு தமிழ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான கதாநாயகியா உயர்ந்தார். அதன்பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பின்னடைவை சந்தித்த நயன்தாரா, அதிலிருந்து மீண்டு வந்து இன்று ஒரு ராணி போல திரையுலகில் ஆட்சி செய்து வருகிறார்.
’நானும் ரவுடி தான்’ படத்தில் இணைந்து பணியாற்றிய போது, நயன்தாராவுக்கும், படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்போதிருந்து இருவரும் கோயில்கள், வெளிநாடு, என பல இடங்களுக்கு ஓன்றாக சுற்றி வருகின்றனர். அடிக்கடி தனி விமானத்திலும் பறக்கின்றனர்.
ஒருமுறை விஜய் டிவியில் நெற்றிக்கண் பட பிரோமோஷன் நிகழ்ச்சியின் போது, நயன்தாராவிடம், தொகுப்பாளினி டிடி’ மோதிரம் குறித்து கேட்க’ அப்போது நயன்தாரா இது நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறினார்.
இந்நிலையில், இருவருக்கும் ஏற்கெனவே திருமணம் முடிந்து விட்டதாக இணையத்திலும் அடிக்கடி வதந்திகள் பரவியது. இதனால் நயனுக்கும், விக்கிக்கும் ஏற்கெனவே திருமணம் முடிந்து விட்டதா? என பல ரசிகர்களும் யோசனையில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களின் நீண்ட ஆண்டுகள் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடக்கிறது.
இத்திருமண நிகழ்வில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.
அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், அஜித், கமல்ஹாசன், சிரஞ்சீவி, சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சமந்தா ரூத் பிரபு உள்ளிட்ட திரையுலகம் மற்றும் அரசியலில் இருந்து குறிப்பிட்ட சிலரே இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்வு என்பதால், திருமணம் நடைபெறும் இடத்தில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருமணத்திற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள், நிகழ்வுக்கு முன் ஒரு சிறப்புக் குறியீட்டைப் பெறுவார்கள். குறியீட்டைக் காட்டிய பிறகே விருந்தினர்கள் திருமண இடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று தம்பதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருமணத்திற்கான ஆடைக் குறியீடும் ’எத்னிக் பேஸ்டல்கள்’ என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோக, விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இந்த கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.ம்
அட்லீயின் ஜவான் படத்தில் ஷாருக்கானுடன், நயன்தாராவும் நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது, இந்நிலையில், நயன்தாரா- விக்கி திருமணத்தில் ஷாருக்கான் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“