நடிகர் விமல் நடிப்பில் ‘களவாணி 2’ திரைப்படம் கடந்தவாரம் வெளியானது. இதில் ஓவியா ஹீரோயினாக நடித்திருந்தார். முதல் பாகத்தை இயக்கியிருந்த இயக்குநர் சற்குணமே இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருந்தார். கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றிருந்தது.
தற்போது நடிகை ஷ்ரேயாவுடன் இணைந்து ‘சண்டக்காரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விமல். இறுதியாக சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் சிம்புவுடன் நடித்திருந்தார் ஷ்ரேயா. கார்த்திக் நரேனின் இயக்கத்தில் அரவிந்த் சாமியுடன் இவர் நடித்துள்ள ‘நரகாசூரன்’ திரைப்படம் ஃபைனான்ஸியல் பிரச்னைகளால் ரிலீஸாகாமல் உள்ளது.
இந்நிலையில் ரஷ்ய தொழிலதிபர் அண்ட்ரெய் கொர்ஸீவை திருமணம் செய்துக் கொண்ட பிறகு ஷ்ரேயா நடிக்கும் முதல் தமிழ் படம் தான் ‘சண்டக்காரி’. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மை பாஸ்’ படத்தின் தமிழ் ரீமேக். இதனை இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கியிருந்தார். தமிழில் உருவாகிவரும் சண்டக்காரியை த்ரிஷா நடிப்பில் வெளியான ‘மோகினி’ படத்தின் இயக்குநர் மாதேஷ் இயக்கி வருகிறார்.
பாஸுக்கும் ஊழியருக்கும் இடையேயான மோதல், அதனைத் தொடர்ந்து வரும் காதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகைச்சுவையுடன் இயக்கப்பட்டு வருகிறது சண்டக்காரி. இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் லண்டன், வெனீஸ், நியூயார்க் ஆகிய நகரங்களில் முடிந்ததையடுத்து, இதன் இரண்டாம் கட்ட படபிடிப்பு கேரளாவில் தொடங்கியுள்ளது.