உலக நாயகனின் மகளான, நடிகை ஸ்ருதிஹாசன் இன்று தனது 32 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன், திரைப்படத்தின் மூலம் தனது முதல் பாடலை பாடி, திரையுலகத்திற்கு அறிமுகமான ஸ்ருதிஹாசன், தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ’ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகி அவதாரம் எடுத்தார். அதன் பின்பு, தமிழ், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார். நடிப்பில் முழு கவனத்தை செலுத்தி வந்த போதிலும், ஸ்ருதியிக்கு இசையின் மீது அதிக ஈடுபாடு. கமல் நடிப்பில் வெளியான ’ உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படத்திற்கு ஸ்ருதி முதன்முதலில் இசையமைத்ததற்கு பாராட்டுக்கள் குவிந்தன. மேற்கத்திய இசைகள் மீது அவருக்கு ஏற்பட்ட தாக்கத்தால், ஸ்ருதி, பாப் இசை உட்பட பல இசைகளை கற்று தேர்ந்தார். இருப்பினும், சினிமா உலகம் ஸ்ருதியை சரியாக பயன்படுத்தவில்லை என்ற கருத்து தற்போது வரை நிலவி வருகிறது.
அழகான முகம், நடிப்பு திறமை, ஆர்வம், ஈடுப்பாடு இவை அனைத்தும் இருந்தும் ஏன்? ஸ்ருதியால் நடிப்பு துறையில் மிகப் பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை என்று கேள்வியை சினிமா உலகத்தில் இருக்கும் பிரபலங்கள் பலரும் எழுப்பியுள்ளனர். இந்த பிழைக்கு காரணம், ஸ்ருதி அல்ல. அவரின் நடிப்பு திறமைக்கு சவால்விடும் படியான படங்கள், கதாபாத்திரங்கள் ஸ்ருதியிடம் செல்லவில்லை என்பதே நிதர்சனம். அப்படியென்றால் திரைத்துறையில் பெண் கதாநாயகிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வரவில்லையா ? என்று கேட்டால் அதுவும் உண்மை இல்லை. சென்ற வருடம் வெளியான நயன் தாராவின் அறம், அதீதி பாலன் நடிப்பில் வெளியான அருவி, தற்போது அனுஷ்கா நடிப்பில் வெளிவந்திருக்கும் பாகமதி போன்ற படங்கள் பெண் கதாநாயகிகளை மையமாக வைத்து வெளிவந்து ,வெற்றி அடைந்த படங்கள் தான். இதுப்போன்ற படங்களை தூக்கி கொண்டாடும் ரசிகர்களும் பெருமளவில் உள்ளனர். சரியான நேரத்தில், நேர்த்தியான கதை தேர்வு, சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் நடிகைகள் இந்த பயணத்தில் வெற்றி அடைந்துவிடுகின்றனர்.
தமிழில் தற்போது ஸ்ருதிஹாசன் அவரின் தந்தை இயக்கத்தில், வெளிவரவிருக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாகவும் தகவல் பரவி வருகிறது.இந்நிலையில், சினிமாவில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்திருக்கும் ஸ்ருதி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும், இசைத்துறையில் பெருமளவில் கவனம் செலுத்தப்போவதாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார். அவரின் இசையில் இந்த வருடத்தில், பல பாடல்களை ரசிக்கலாம் என்று கூறியுள்ள ஸ்ருதி, சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும் கூறவில்லை, இசை ப்ளஸ் நடிப்பு இரண்டையும் சரிவிகிதத்தில் நகர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.