ஸ்ருதிஹாசன் நடிகை, பாடகி, தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். தனது 6 வயதில் இசைப் பயணத்தை தொடங்கிய ஸ்ருதி, இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சினிமாவில் பிஸியாக இருந்த போதே, பிரிட்டீஷ் நாடக நடிகர் மைக்கேல் கோர்சலே என்பவரும், ஸ்ருதிஹாசனும் நண்பர்களாக பழகினார்கள். பிறகு காதலிக்க தொடங்கினார்கள். இதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், ஒருமுறை சென்னையில் நடந்த திருமண விழாவில், கமல்ஹாசனுடன் சேர்ந்து அவர்கள் கலந்துகொண்டார்கள்.
ஆனால், இந்தாண்டின் தொடக்கத்தில் ஸ்ருதி தனது சமூக தளத்தில், "என் வாழ்க்கையில் இன்னொரு புதிய கட்டத்தை தொடங்குகிறேன். எல்லா காதல் பாடங்களுக்காகவும் நன்றி. இருண்ட இடத்தின் ஆழத்தில்தான் ஒளி பிரகாசிக்கும். இசை, மேலும் படங்கள் என்று காத்திருக்கிறேன். என்னுடனேயே நான் இருப்பது, எப்போதுமே எனது பெரிய காதல் கதையாக இருந்துள்ளது'' என்று தெரிவித்தார்.
ஸ்ருதிஹாசனின் காதலர் மைக்கேல் கோர்சலே தனது டிவிட்டரில், ''வாழ்க்கை நம்மிருவரையும் உலகின் எதிரெதிர் துருவத்தில் வைத்துள்ளது. எனவே, நாமிருவரும் துரதிர்ஷ்டவசமாக அவரவர் பாதையில் பயணிக்க வேண்டியிருக்கிறது. என்றாலும், அவர் என் சிறந்த தோழி. அவரை என் தோழியாக அடைந்ததற்கு நன்றி'' என்று குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து ஸ்ருதிஹாசனும், மைக்கேல் கோர்சலேவும் தங்கள் காதலுக்கு பிரேக்அப் சொல்லி பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், லண்டன் இஸ்லிங்டன் மாவட்டத்தில் புதிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறார் ஸ்ருதி. இதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு ரசிகர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 8ம தேதி மாலை ஆறு மணிக்கு இந்நிகழ்ச்சி தொடங்குகிறது. 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்.
நடிப்பதைவிட, இசை நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டும் ஸ்ருதி, லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற டரவ்படூர் எனும் இடத்திலும் 'தி நெட்' என்ற பெயரில் சமீபத்தில் இசைக்கச்சேரி நடத்தியிருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.