Shwetha Bandekar Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகிய வரும் பாப்புலர் சீரியல்களில் ‘சந்திரலேகா’ சீரியலும் ஒன்று. கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த சீரியல் 2000 எபிசோடுகளை கடந்து ஓடி கொண்டிருக்கிறது. இதில், நடிகை ஸ்வேதா பந்தேகர் ஹீரோயினாகவும், ஜெய் தனுஷ் ஹீரோவாகவும் நடிக்கின்றனர். மேலும், அருண் குமார் ராஜன், நாகஸ்ரீ, சந்தியா ஜாகர்லமுடி, ஹர்ஷலா ஹனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சந்திரலேகா ஹீரோயினாக நடித்துவரும் நடிகை ஸ்வேதாவை பொறுத்தவரை, அவர் தமிழில் அறிமுகமாகிய 2வது சீரியல் தான் இது. எனினும், இந்த சீரியலில் அவர் நடித்ததன் மூலமாக ரசிகர்களிடையே அதிகம் பிரபலமடைந்தவராக வலம் வருகிறார்.

இருப்பினும், இவரும் சில சின்னத்திரை நடிகைகள் போலவே வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடித்தவர் தான். ஆனால், அங்கு அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கததால் சின்னத்திரை பக்கம் திரும்பினார்.

சென்னையில் தனது பொறியியல் படிப்பை முடித்த நடிகை ஸ்வேதா, ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்தார். இவரது அழகான தோற்றத்தால் தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர், தமிழில் 2007ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தார்.

தனது முதல் படத்திலே நடிகர் அஜித் உடன் நடித்ததால் இவருக்கு அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. எனவே, 2008ம் ஆண்டு வெளியான ‘வள்ளுவன் வாசுகி’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். படம் தோல்வி அடைவே ஸ்வேதாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்பு குறைந்தது.

இதனால், அவர் சில படங்களில் துணை நடிகையாக நடிக்க தொடங்கினார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நடித்தார். இதுவரை 9ம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்தில் மல்யுத்த போட்டி அறிவிப்பாளராக ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

இப்படி பல போராட்டங்களை சந்தித்த நடிகை ஸ்வேதாவுக்கு சினிமா கை கொடுக்கவில்லை என்றாலும் சின்னத்திரை நன்றாகவே கை கொடுத்துள்ளது என்றே கூறலாம். தற்போது, இவர் நடித்துவரும் ‘சந்திரலேகா’ 2000 மேற்பட்ட எபிசோடுகளை கடந்த மெகாத்தொடர் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறது. மேலும் இந்த சீரியல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகை ஸ்வேதா சந்திரலேகா சீரியல் தவிர சிந்தால் சோப், உதயகிருஷ்ணா அசல் நெய் போன்ற விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“