Shyam turns Singer : ’இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘ஹீரோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். டிசம்பர் இறுதியில் இப்படம் வெளியாகவிருக்கும் நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகியுள்ளது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
‘மால்ட்டோ கிதாப்புள்ள’ எனத் தொடங்கும் சிங்கிள் ட்ராக் பாடலை ஷ்யாம் விஸ்வநாதன் பாடியிருக்கிறார். இவர் கோலங்கள், தென்றல், மாயா, சரவணன் மீனாட்சி 2, மரகத வீணை உள்ளிட பல முன்னணி சீரியல்களில் நடித்துள்ளார். அதோடு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் கானா பாடல்களும் பாடியுள்ளார்.
இது குறித்து ஷ்யாம், “நான் ஒரு நிகழ்ச்சியில இருக்கும் போது, யுவன் இசைல ஒரு பாட்டு பாடணும்ன்னு ஃபோன் வந்தது. கனவா நனவான்னு கூட தெரியல. அடுத்தநாள் யுவன் சார் ஸ்டூடியோவுக்குப் போனேன். அங்க சவுண்ட் இஞ்ஜினியர் இருந்தாரு. ஹை பிட்ச் பாட்டு, பாடி முடிச்சிட்டு வந்துட்டேன். வீட்ல அம்மாவுக்கும், மனைவிக்கும் மட்டும் தான் தெரியும். சினிமாவ பொறுத்தவரைக்கும் கடைசி நேரத்துல எது வேணும்ன்னாலும் நடக்கலாம்ங்கற பயம் உள்ளுக்குள்ள இருந்துட்டே இருந்துச்சு. அப்புறம் ஒருநாள் கரெக்ஷன் இருக்குன்னு ஸ்டூடியோவுல இருந்து கூப்பிட்டாங்க.

அங்க யுவன் சார் இருந்து ‘ஹாய்’ சொல்லிருக்காரு. நான் அவர கவனிக்காம வெறுமனே ஹாய் சொல்லிட்டு போய்ட்டேன். அப்புறம் கரெக்ஷன் சொல்லும் போது தான் அது யுவன் சார்ன்னு கவனிச்சேன். ‘சாரி சார்’ன்னு சொன்னேன். ‘நல்லா பாடியிருக்கீங்க பிரதர்ன்னு’ அவர் சொன்னது ’நிஜமான்னு’ நானே என்ன பலமுறை கேட்டுக்கிட்டேன். இன்னும் சிவகார்த்திகேயன் எந்த கமெண்டும் சொல்லல.
நான் காலேஜ்ல இருந்தே மேடைகள்ல பாடிட்டு வர்றே. ஆனா, எப்போவும் கானா பாட்டு தான். கொஞ்ச நாள் கருணாஸ் சார் ட்ரூப்ல பாடிட்டு இருந்தேன். சினிமாவுல பின்னணி பாடகராகனும்ன்னு நினைச்சேன். ஆனா அப்போ அது நடக்கல. தொடர்ந்து நாடகங்கள்ல நடிச்சாலும், நம்மளால பின்னணி பாடகராக முடியலேயேங்கற வருத்தம் இருந்துச்சு. இப்போ அந்த வருத்தம் காணாமா போயிருக்கு” என்றார் மகிழ்ச்சியுடன்.