சித்தார்த் - ஆன்ட்ரியா ரொமான்ஸைப் பார்த்து வியந்து போயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு நெருக்கமான தம்பதிகளாக இருவரும் நடித்துள்ளனர்.
சித்தார்த் நடிப்பில் நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் படம் ‘அவள்’. மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக ஆன்ட்ரியா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்தப் படம் ரிலீஸாகிறது. சித்தார்த்துடன் இணைந்து வயாகாம்18 என்ற நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
சித்தார்த், மூளை மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர். அவருடைய மனைவி ஆன்ட்ரியா. வடஇந்தியாவின் பனிப்பிரதேசத்தில் வசிக்கும் இவர்கள் வீட்டுக்கு அருகில், இன்னொரு குடும்பம் குடிவருகிறது. அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஜெனி என்ற பெண்ணுக்கு பேய் பிடித்துவிடுகிறது. அதனால், சித்தார்த்துக்கும், ஆன்ட்ரியாவுக்கும் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
சித்தார்த் மற்றும் மிலிந்த் ராவ் இருவருக்கும் தெரிந்த நண்பர் ஒருவருக்கு நிஜத்தில் நடந்த கதை இது. அதைத்தான் அப்படியே படமாக்கியுள்ளனர். பொதுவாக, தமிழில் பேய்ப் படங்கள் வந்தால் காமெடி கலந்து இருக்கும். ஆனால், அப்படி இல்லாமல் ஹாலிவுட்டில் பேய்ப் படங்கள் எப்படி ராவாக இருக்குமோ, அதேபோல் இந்தப் படத்தை எடுத்துள்ளனர். ‘காஞ்ஜுரிங்’ மற்றும் ‘அனபெல்லா’ வரிசையில் இந்தப் படமும் இருக்கும் என்கிறார் சித்தார்த்.
சித்தார்த், இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை, இயக்குநர் மிலிந்த் ராவுடன் இணைந்து எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளாக இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கின்றனர். இருவருமே இயக்குநர் மணிரத்னத்திடம் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில் உதவி இயக்குநர்களாகச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஹாரர் படத்தின் ரசிகர்கள் எல்லோருக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். அதுமட்டுமல்ல, இதுவரை ஹாரர் படமே பார்க்காதவங்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். நம்முடைய தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து, நேட்டிவிட்டி கொஞ்சமும் மாறாமல் ஹாலிவுட் தரத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது” என்கிறார் சித்தார்த்.
இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ஒரு பாடலைப் பார்த்தவர்கள், சித்தார்த் - ஆன்ட்ரியா ரொமான்ஸைப் பார்த்து வியந்து போயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு நெருக்கமான தம்பதிகளாக இருவரும் நடித்துள்ளனர். அதுவும் அந்த லிப் டு லிப் காட்சி, பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும் வகையில் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வைரலானா அனிருத் - ஆன்ட்ரியா முத்த போட்டோவைவிட இது நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.