கிராமத்து கதைகளுக்கு பெயர்போன இயக்குநர் சுசீந்திரன் நடிகர் சிம்புவை வைத்து இயக்கியுள்ள படம் ஈஸ்வரன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படத்தில், கோவில் படத்திற்கு பிறகு சிம்பு கிராமத்து வேடத்தில் நடத்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் கோலிவுட்டில் பெரும் சர்ச்சைகளை சந்தித்த சிம்பு குறுகிய கால தயாரிப்பாக இந்த படத்தில் நடித்துள்ளார். ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கிறது என்று பார்போம்.
திண்டுக்கல்லுக்கு அருகே உள்ள கிராமத்தில் அனைவரும் மதிக்கத்தக்க மனிதர் பெரியசாமி (பாரதிராஜா). மனைவியை இழந்த இவர், தனது பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக இருந்து வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து அவரவர் தனித்தனியான சென்றுவிடுகின்றனர். சில வருடங்களுக்கு பிறகு அவர்கள் அனைவரும் பெரியசாமி மனைவியின் நினைவு நாளில் மீண்டும் கிராமத்திற்கு திரும்பி வருகின்றனர். அப்போது பெரியசாமியால் சிறை சென்ற ஒருவரின் மூலம் பெரியசாமியின் குடும்பத்திற்கு ஆபத்து வருகிறது. இந்த ஆபத்தில் இருந்து பெரியசாமியின் குடும்பத்தை அவரது மகன் ஈஸ்வரன் (சிம்பு) காப்பாற்ற போராடுகிறார். இறுதியில் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? ஆபத்தின் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிக்தை.
2003-ம் ஆண்டுக்கு பிறகு கிராமத்து வேடத்தில் நடித்துள்ள சிம்பு மீண்டும் ஒருமுறை தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்பாவை கவனமுடன் பார்த்துக்கொள்வது குடும்பத்திற்காக எதிரியுடன் மோதுவது நாயகியுடன் டூயட் பாடுவது, நண்பர்களுடன் அரட்டை என அனைத்து இடங்களிலும் தனது வழக்கமான சிம்புவை வெளிகொண்டுவந்துள்ளார். ஆனால் அவரை விட அவரது அப்பாவாக பெரியசாமி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாரதிராஜாவுக்கே அதிகமான கட்சிகள் உள்ளது. அதற்கு ஏற்றார்போல் அவரும் தனது வழக்கமான சிறப்பான நடிப்பை வெளிப்படுதியுள்ளார்.
சிம்புவின் திறமையை இயக்குநர் சரிவர பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது. சண்டை காட்சியல் அவ்வளவாக ஈர்ப்பு இல்லை. பாலசரவணனின் காமெடி ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வால் கொடுத்த வேலையை மட்டும் செய்துள்ளார். மற்றொரு நாயனி நந்திதா தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமன் இசையில், பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றுள்ளதால் திரையில் பார்ப்கும்போது இன்னும் அழகாக காட்சியளிக்கிறது. ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு கிராமத்து அழகை சரியான கோணத்தில் காட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இதற்கு முன் வந்த கிராமத்து கதைகளின் சாயல் ஆங்காங்கே தெரிந்தாலும் இந்த ஈஸ்வரன் ரசிக்கும்படியே உள்ளான்.