/indian-express-tamil/media/media_files/2025/01/27/myTFOwHUGzUZZ5sW63qh.jpg)
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு 'ஜனநாயகன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், தனது 69-வது திரைப்படத்துடன் திரைவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், அப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் நேற்று (ஜன 26) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, விஜய்யின் கடைசி திரைப்படத்திற்கு 'ஜனநாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக, படக்குழுவினர் வெளியிட்ட 2-வது லுக் போஸ்டரில் நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் ரெஃபரன்ஸ் இடம்பெற்றுள்ளது.
சிவப்பு நிறத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த போஸ்டரில், கைகளில் சாட்டையை சுழற்றிய படி விஜய் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, 'நான் ஆணையிட்டால்' என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் போஸ்டரில் பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1965-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தில் 'நான் ஆணையிட்டால்' என்ற பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு ஈடுசெய்யும் விதமாக இந்த போஸ்டர் அமைந்துள்ளதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அதனடிப்படையில், விஜய்யின் முழு நேர அரசியலுக்கு ஏற்றார் வகையில் அவரது கடைசிப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும், போஸ்டரில் அதிகப்படியாக இடம்பெற்றுள்ள சிவப்பு நிறம், புரட்சியை குறிக்கிறது என நெட்டிசன்கள் டீகோட் செய்துள்ளனர். மேலும், சினிமாவில் இருந்து அரசியலில் கால் பதித்து அதில் வெற்றிகரமாக முதலமைச்சர் பதவிக்கு உயர்ந்த எம்.ஜி.ஆரின் ரெஃபரன்ஸ்கள் அனைத்தும், விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு அடியெடுத்து வைக்கும் வகையில் அமைந்துள்ளன.
வினோத் இயக்கி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் மற்றும் பிரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
நன்றி - தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.