தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன் டிக்டாக் செயலியில் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், டிக்டாக் பயனர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
1990-களில் தமிழ் சினிமா ரசிகர்களை தனது அழகால் கட்டிப்போட்டு வைத்திருந்தவர் நடிகை சிம்ரன். இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக உள்ள விஜய், அஜித், சூர்யா முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து நம்பர் ஒன் கதாநாயகி என்று வலம் வந்த சிம்ரன் திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
பின்னர், அவ்வப்போது தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று திரைத்துறையில் தனது இருப்பை சினிமா ரசிகர்களுக்கு தெரிவித்துக்கொண்டிருந்தார். சில படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் வந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெற்றி பெற்ற பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.
சிம்ரன் சினிமா, தொலைக்காட்சிகள் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களிலும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்பார்.
அந்த வரிசையில், சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில், தான் டிக்டாக் செயலியில் இணைந்திருப்பதாகவும் அதன் மூலம் ரசிகர்கள் தொடர்பில் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
சிம்ரன் தனது டிக்டாக் ஐடி லிங்கை இணைத்து அதில் தன்னை பின்தொடரலாம் என்று குறிப்பிட்டுள்ளார். சிம்ரன் டிக்டாக்கில் இணைந்திருப்பதை நெட்டிசன்கள் பலரும் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
டிக்டாக் செயலி பல முன்னணி நடிகர்களின் டிக்டாக் வீடியோக்களால் ஏற்கெனவே கொண்டாட்டமாகத்தான் இருக்கிறது. இப்போது, நடிகை சிம்ரனும் டிக்டாக்கில் இணைந்திருப்பதால் சிம்ரனின் சூப்பர் டான்ஸ் வீடியோக்களால் இனி டிக்டாக் தெறிக்கப்போகிறது. ரசிகர்கள் கொண்டாட்டத்தும் பஞ்சம் இருக்காது.