/indian-express-tamil/media/media_files/2025/08/11/singam-puli-2025-08-11-12-12-09.jpg)
மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி மீண்டும் திரையிடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம் புலி, விஜயகாந்துடன் தனக்கிருந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு உருக்கமான உரையாற்றினார்.
"நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்ததுக்குக் காரணமே கேப்டன்தான். அவருடைய அலுவலகத்தில் சாப்பிட்டதால்தான் என்னால் தொடர்ந்து சினிமாவில் இருக்க முடிந்தது. என்னுடைய உறவினர்கள், 'உனக்குச் சோறு போட ஒரு ஆள் இருக்கார். அதனால் நீ சென்னையை விட்டு வரவே மாட்டாய்' என்று கூறிச் சென்றார்கள்" என்று தனது ஆரம்ப காலங்களை சிங்கம் புலி நினைவு கூர்ந்தார்.
ஒருமுறை பிரசாத் ஸ்டூடியோவில் விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்க மக்கள் கூட்டம் வரிசையில் நின்றது. அந்த வரிசையைத் தான் ஒழுங்குபடுத்தியபோது, விஜயகாந்த் தன்னைப் பற்றி விசாரித்து, "நீ ஏன் போட்டோ எடுக்கல?" என்று கேட்டார். அதற்குத் தான் "உங்களை வெச்சு ஒரு படம் எடுக்கணும்" என்று சொன்னதும், விஜயகாந்த் சிரித்துக்கொண்டே, "'நினைச்சேன்டா... மதுரைக்காரனாலே இப்படி தான்' என்று சென்றதாகக் கூறினார்.
அஜித் படத்தை இயக்கிய பின், விஜயகாந்தை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்று யோசித்தபோது, சூர்யாவின் படத்திற்கு ஒரு நாள் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக அவரைச் சந்தித்தபோது, "10 நிமிஷம் கழிச்சு வா, ஒரு நாள் ஷூட்டுக்காக ஒரு டைரக்டர் கதை சொல்ல வராரு" என்றார் விஜயகாந்த். அது தான் என்று தெரிந்ததும், அவர் ஒரு நாளுக்கு நடிக்க மாட்டேன் என்று மறுத்தார். பின்னர் 10 நாட்கள் கழித்துத் தேதி கொடுத்தார்.
ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படப்பிடிப்பு நடந்தபோது, தான் மொத்த யூனிட்டையும் அழைத்துச் சென்றதாகவும், விஜயகாந்த் "ஏன் தேவையில்லாம காசு செலவு பண்றீங்க? இங்கேயே ஆளுங்க இருக்காங்க, நீயும், சூர்யாவும், ரத்னவேலும் மட்டும் வாங்க" என்று கூறி மூன்று மணிநேரம் ஷூட்டிங்கை நிறுத்தியதாகவும் சிங்கம் புலி தெரிவித்தார். மேலும், தாங்கள் அவருக்கு மாலை அணிவித்தபோது, "எதுக்கு இதெல்லாம்? தேவையில்லாத செலவு" என்று கண்டித்ததாகவும், அவர் அவ்வளவு நல்ல மனிதன் என்றும் நெகிழ்ந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.