பாடகி கெனிஷா பிரான்சிஸ் நடிகர் ஜெயம் ரவியுடன் ரகசிய உறவில் இருப்பதாக வதந்திகள் உலவிய நிலையில், சமூக வலைதளத்தில் ‘ஜெயம் ரவி பத்திரமாக இருக்கிறாரா?’ என்று ட்ரோல் செய்த ரசிகருக்கு கெனிஷா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார். தங்களை சுற்றியுள்ளவர்களின் நலனுக்காக இந்த கசப்பான முடிவை எடுத்துள்ளதாகவும் இதை இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு எனவும் ஜெயம் ரவி தெரிவித்திருந்தார்.
ஜெயம் ரவி விவாகரத்து செய்வதாக அறிவிப்பு வெளியான அடுத்த நாள், அவருடைய மனைவி ஆர்த்தி, ஜெயம் ரவியின் அறிவிப்புக்கு அதிர்ச்சி தெரிவித்து, இந்த முடிவை தன்னிடம் கலந்தாலோசிக்காமல் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று அறிக்கை வெளியிட்டார்.
ஆர்த்தி அந்த அறிக்கையில், “ரவியிடம் பேசுவதற்கு நான் பல முறை முயற்சித்தும் அது நடக்கவில்லை. எனக்கும் இரு குழந்தைகளுக்கும் என்ன வழி என்பதை போல் ஆர்த்தி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குபிறகுதான், ஜெயம் ரவி விவாகரத்து பற்றிய அறிக்கையை கோவாவில் இருந்து வெளியிட்டார் என்பது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது அறிக்கையில், ஜெயம் ரவியை தேடி அவருடைய வீட்டிற்கு சென்றால் அங்கு அவர் இல்லை என்றும், அவரது வீட்டில் உள்ளவர்கள் ரவி தங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆர்த்திக்கு நடிகருடன் தொடர்பு என்பதால்தான் ஜெயம் ரவி விவாகரத்து செய்தார் என்று சமூக வலைதளங்களில் அவதூறுகளும் வதந்திகளும் பரவியது.
அதே நேரத்தில், ஆர்த்தி, ஜெயம் ரவியை எவ்வளவு தீவிரமாகக் காதலித்தார் என்பதை வெளிப்படுத்தும் ஆர்த்தியின் பழைய நேர்காணல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைத்தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவிக்கு பாடகி கெனிஷாவுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனால்தான் ஆர்த்தியை விவாகரத்து செய்யவிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் மற்றொரு வதந்தி பரவியது. இதற்கு நடிகர் ஜெயம் ரவி சனிக்கிழமை (செப்டம்பர் 21) செய்தியாளர்கள் சந்திப்பில், மறுப்பு தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜெயம் ரவி, “ஒரு பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். இப்படி செய்யாதீர்கள். கெனிஷா 600 லைவ் ஷோக்களில் பாடியவர். தனது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்தவர். அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆலோசகர். நானும் அவரும் சேர்ந்து ஒரு ஹீலிங் மையம் தொடங்கப் போகிறோம். அதை கெடுக்காதீங்க, யாரும் கெடுக்க முடியாது” என்று கூறினார்.
இந்நிலையில் கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷாவை ட்ரோல் செய்வது போல, ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர். அதில் ஒரு நெட்டிசன் ரசிகர் ட்ரோல் செய்யும் விதமாக, கெனிஷாவின் பதிவில், “ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாக இருக்கிறாரா” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்வியால் கடும் கோபமடைந்த பாடகி கெனிஷா பதிலளிக்கையில், “நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இருக்கிறீர்களா, உங்களது கீழ்த்தரமான சிந்தனைகளில் இருந்தும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? முதலில் நீங்கள் ஒரு பாதுகாப்பான நபர்தானா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். நெட்டிசனுக்கு பாடகி கெனிஷா கொடுத்த பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“