/indian-express-tamil/media/media_files/AkU38Z96q7DuBvDKk6gC.jpg)
ஒவ்வொரு நாளும் உன்னை இழந்து அதிகமாக வாடுகிறேன்; மகள் நந்தனா பிறந்த நாளில் பாடகி சித்ரா உருக்கமான பதிவு
தனது மகளின் பிறந்தநாளையொட்டி பாடகி சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக இருந்து வருபவர் கே.எஸ்.சித்ரா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஒரியா, இந்தி, ஆசாமி, வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். ரசிகர்களால் சின்னக்குயில் என அழைக்கப்படும் சித்ரா கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் முன்னணி பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். சித்ரா இதுவரை 6 முறை தேசிய விருதுகளையும், 6 முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும், பல்வேறு மாநில விருதுகளையும், இந்தியாவின் மிக உயரிய பத்மவிபூஷண் விருதையும் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட சித்ரா, 1988 ஆம் ஆண்டு விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2002 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நந்தனா என தங்கள் குழந்தைக்கு சித்ரா -விஜய் சங்கர் பெயரிட்டனர். இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து நந்தனா 9 வயதில் உயிரிழந்தார்.
பல வருடங்களுக்குப் பிறகு பிறந்த தனது மகளை இழந்த பாதிப்பில் சித்ரா உருக்குலைந்து போன சூழலில், அவருக்கு உறவினர்களும் திரையுலகினரும் ஆதரவாக இருந்தனர். சித்ரா தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று அனைத்து குழந்தைகளுக்கும் அம்மாவாக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று சித்ராவின் மகள் நந்தனா பிறந்தநாள். மகளை இழந்து வாடும் சித்ரா, தன் மகளின் பிறந்த நாளில் உருக்கமான பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ”நீ என் இதயத்தில் ஒரு துளையை விட்டு சென்றுள்ளாய். அதை என்னால் என்றும் நிரப்பவே முடியாது. நீ என்னை விட்டு போன பின் ஒவ்வொரு நாளும் நான் உன்னை இழந்து அதிகமாக வாடுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா” எனப் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களும் திரைத்துறையினரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.