பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) காலமானார். அவருக்கு வயது 78.
பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவுர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனான மாணிக்க விநாயகம் தமிழ் சினிமாவில் தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர். நாட்டுப்புற இசை பாடகராக இருந்த மாணிக்க விநாயகம், முதன் முதலில் 2001ம் ஆண்டு விக்ரம் நடித்த ‘தில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணுக்குள்ளே கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி’ என்ற பாடலைப் பாடி தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இதையடுத்து தமிழ் சினிமாவில் பல வெற்றி பாடல்களைப் பாடினார்.
மாணிக்க விநாயகம் சினிமாப் பாடகராக மட்டுமல்லாமல், சில படங்களில் நடித்து முத்திரை பதித்தார். நடிகர் தனுஷ் நடித்த திருடா திருடி, யுத்தம் செய், பேரழகன், போஸ், திமிரு, வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவ்வப்போது தொலைக்காட்சிகளில் திரை இசைப் பாடல் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இந்த நிலையில், பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 78.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராகவும் நடிகராகவும் பிரபலமாக அறியப்பட்ட மாணிக்க விநாயகத்தின் மறைவு தமிழ் சினிமா துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பாடகர்கள், நடிகர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாடகர் மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “பிரபல திரைப்படப் பாடகர் வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான வழுவூர் மாணிக்க விநாயகம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளைத் துல்லியமாக இரசிகர்களுக்குக் கடத்தி விருந்தளித்தவர் அவர்.
அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர்.
பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.