/indian-express-tamil/media/media_files/2025/08/12/singer-soundarya-2025-08-12-11-50-18.jpg)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடகி சௌந்தர்யா, சமீபத்தில் டெலி விகடனுக்கு அளித்த பேட்டியில் தனது அனுபவங்கள் பற்றி வெளிப்படையாகப் பேசினார். சீரியல் துறையில் உள்ள அரசியல், 'மாஸ்டர்' படத்தில் நடித்த அனுபவம், இசைத்துறையில் தான் சந்தித்த சவால்கள் என பல விஷயங்களை அவர் மனம் திறந்து பகிர்ந்துகொண்டார். தற்போது அவர் முத்தமழை பாடல் வெளியீட்டு விழாவில் ப்ளேபேக் சிங்கராக பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பாடகி சௌந்தர்யா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர் 3' மற்றும் 'சூப்பர் சிங்கர் 4' நிகழ்ச்சிகளில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். மேலும், 'சூப்பர் சிங்கர் 5' நிகழ்ச்சியின் மினி சீரிஸ் மற்றும் பிரமாண்ட இறுதிப்போட்டியிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு விஜய் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசியுள்ளார்.
சௌந்தர்யா 'பகல் நிலவு' என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது மிகவும் ஆர்வமாக அதில் இணைந்ததாகக் கூறினார். ஆனால், சீரியல் உலகில் தனக்குத் தெரியாத பல அரசியல்கள் இருப்பதை அவர் கண்டார். தான் கண்ட சில நிகழ்வுகள் அவருக்கு வருத்தமளிப்பதாகக் கூறிய சௌந்தர்யா, அந்த அனுபவம் தனக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்ததாகவும் குறிப்பிட்டார். இந்தச் சூழலில் நடிப்புக்கு முடிவுக்கட்டிவிட்டு, மீண்டும் இசை மீது கவனம் செலுத்தத் தொடங்கினார்.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பேசிய அவர், அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தாலும், தனக்குக் கிடைத்த ரோல் மனதளவில் சோகத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார். அந்த ரோல் தனக்கு ஊக்கம் அளிக்காமல், சோர்வை ஏற்படுத்தியதால், நடிப்புத் துறையை விட்டு விலகி, முழு நேரமும் பாடலுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்தார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது அதன் நோக்கம் மாறிவிட்டதாக சௌந்தர்யா குறிப்பிட்டார். முன்பு இயல்பாக இருந்த அந்த நிகழ்ச்சி, இப்போது அதிக கண்டெண்ட்டுக்காக மட்டுமே நடப்பதாக அவர் உணர்வதாக கூறினார். பழைய சூப்பர் சிங்கர் போட்டியாளர்களான நிக்கில், ராகினி போன்றவர்களை இன்றும் மக்கள் நினைவில் வைத்துள்ளனர். ஆனால், இப்போதைய போட்டியாளர்களின் பெயர்கள் அதிகம் நினைவில் இல்லை என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். அதிகப்படியான கண்டெண்ட்கள் இருப்பதால், ஒரு பாடகரின் பாடல் மக்களின் மனதில் நிலைப்பது கடினமாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.
இசைத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவர் பேசினார். பிளேபேக் பாடுவதற்கான தகுதிகள் மாறியுள்ளன. முன்பு பாரம்பரியமான குரல்களுக்கு முக்கியத்துவம் இருந்த நிலையில், இப்போது டோனாலிட்டி அடிப்படையிலான குரல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுரையில் பிறந்து வளர்ந்த அவருக்கு, சென்னைக்கு வந்த பிறகுதான் இசையின் தீவிரத்தன்மை புரிந்ததாகவும் அவர் கூறினார். சென்னையில்தான் இசைக்கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளும், மதிப்பும் கிடைப்பதாகவும், மதுரையில் ஒரு முழு நேர இசைக்கலைஞராக வாழ்வது கடினம் என்றும் அவர் தெரிவித்தார்.
சௌந்தர்யாவின் தந்தை ஒரு வழக்கறிஞர், தாய் ஒரு இசைக் கலைஞர் மற்றும் பரதநாட்டிய ஆசிரியர். தனது தாய், மதுரை போன்ற ஊரில் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, சர்வதேச அளவில் அவர்களை வெற்றிபெறச் செய்துள்ளதாகப் பெருமையுடன் கூறினார். தனது எதிர்காலக் கனவு பற்றிப் பேசிய அவர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனியாக ஒரு பாடல் பாட வேண்டும் என்றும், சொந்தமாக பாடல்களை உருவாக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவதாகத் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.