கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிர்பாதுகாப்பு உதவியுடன் அவருக்கு வெண்டிலேட்டர் எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
எம்.ஜி.எம் மருதுவமனை நிர்வாகம் பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து நாள்தோறும் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதே போல, எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.பி.சரண் தந்தையின் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு தெரிவித்து வருகிறார்.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா அழைப்பின் பேரில் இசையமைப்பாளர் இளையராஜா, ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். மேலும், சபரிமலை ஐயப்பன் கோயிலில் எஸ்.பி.பி குணமடைய வேண்டி சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது.
இந்த நிலையில், எஸ்.பி.பி-க்கு நடத்திய கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் நெகட்டிவ் என்று அதாவது தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வெளியானதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து, எஸ்.பி.பி.யின் மகன் தயவுசெய்து யாரும் அப்பாவின் உடல்நிலை குறித்து வதந்திகளைப் பரப்பாதீர்கள் என்று கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து எஸ்.பி.பி. சரண் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாவது, “அனைவருக்கும் வணக்கம், நான் வழக்கமாக அப்பாவுடைய உடல்நிலை குறித்து மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு விவரங்களை வெளியிடுவேன். இன்று காலை நான் ஒரு அறிவிப்பு வெளியிட்டேன். நான் மட்டும்தான் அப்பாவின் உடல்நிலை குறித்து விவரங்களைப் பெற்று வெளியிடுகிறேன். எனக்குதான் அப்பாவின் உடல்நிலை பற்றிய தகவல்கள் முதலில் வருகின்றன. அதன் பிறகு, நான்தான் அவற்றை ஊடகங்களுக்கு வெளியிடுகிறேன். ஆனால், இன்று அப்பாவுக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று கோவிட்-19 நெகட்டிவ் என முடிவு வந்ததாக ஒரு வதந்தி துரதிருஷ்டவசமாக உலா வருகிறது. கோவிட்-19 தொற்று பாஸிட்டிவ் அல்லது நெகட்டிவ் என்பது முக்கியமல்ல. அவருடைய உடல்நிலை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. மருத்துவமனையில் அவர் உயிர் பாதுகாப்பு உதவியுடன் வெண்டிலேட்டர் எக்மோ சிகிச்சையில் உள்ளார். அதிர்ஷ்டவசமாக அவருடைய உடல்திறன் காரணமாக நுரையீரல் சீரடைய சாத்தியம் உள்ளது. அதனால், தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள். இன்று மாலை மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை செய்த பிறகு அப்பாவின் உடல்நிலை குறித்து தெரிவிக்கிறேன். நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.