Singer SP Balasubrahmanyam: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒன்றரை மாதத்துக்கு மேலாக சிகிச்சைப் பெற்று வந்த அவர், செப்டம்பர் 24-ஆம் தேதி காலமானார். அவரது மறைவு உலகம் முழுவதும் இருக்கும் இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அதோடு, எஸ்.பி.பி பெயரில் தேசிய விருது வழங்க வேண்டும் எனவும், தாதே சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும், எனவும் திரையுலகினர் பலரும் கோரிக்கை வைத்தனர். தவிர, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எஸ்.பி.பிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் நெல்லூரை பூர்வீகமாகக் கொண்ட எஸ்.பி.பி.யை கவுரவிக்கும் வகையில் நெல்லூரில் உள்ள அரசு இசை மற்றும் நாட்டிய பள்ளியின் பெயரை டாக்டர் எஸ். பி.பாலசுப்பிரமணியம் இசை மற்றும் நாட்டிய பள்ளி என்று பெயர் மாற்றம் செய்ய ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை ஆந்திர வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மிகாபட்டி கெளதம் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”