Singer SPB health SPB health condition : கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி இருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவரின் குரலுக்கு தென்னிந்தியாவே அடிமை. இவரின் மகன் எஸ்.பி சரணும் பின்னணி பாடகர் தான். இந்நிலையில் கடந்த ஆக.,5ல் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சென்னை, எம்.ஜி.எம். மருத்துவமனையில் எஸ்பிபி அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா சிகிச்சை மேற்கொள்வதாக அவரே வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார் அதில். ’கொரோனா பதிப்புக்கு சிகிச்சை பெறுகிறேன். சீக்கிரம் திரும்பிவிடுவேன். யாரும் போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை மோசமடைந்து தீவிர கண்காணிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து எம்.ஜி.எம்., மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை : ஆக., 5ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் ஐசியு.,விற்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் உதவி அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவ குழுவினர் அவரை கவனித்து வருகின்றனர். இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. எங்களது மருத்துவகுழு அவரை தீவிரமாக கணிகாணித்து சிகிச்சை அளித்து வருகிறது. என தெரிவித்திருந்தது.
இந்த செய்தி அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சினிமா உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவர் மீண்டு நலம் பெற்று வர தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் மட்டுமில்லை தெலுங்கு, கன்னடம் சினிமா துறையினரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம் பெற பிராத்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் பாரதிராஜா, நடிகை ராதிகா சரத்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இசையமைப்பாளர் அனிருத் என ஒட்டுமொத்த திரையுலகினரும் எஸ்.பி,பிக்காக பிராத்தனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil