பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று வந்துள்ளதாகவும் அவர் ஐபேடில் கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளை பார்த்து வருவதாக அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களிலேயே அவருடைய உடல் நிலை மோசமானதால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் மற்றும் எக்மோ உயிர் காக்கும் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பாகர் எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் என திரைத்துறையினர் ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர், அவருடைய உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. எஸ்.பி.பி.யின் மகன் சரண் தந்தையின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.
அதன்படி, இன்று எஸ்.பி.பி.சரண் தனது தந்தையின் உடல் நிலை குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், “அனைவருக்கு வணக்கம். நான் ஒரு வாரமாக அப்பாவின் உடல் நிலை பற்றி பதிவிடாததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த வார இறுதியில் ஒரு நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கை இருந்தது. அவருடைய நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பாத்தோம். அதே போல, ஒரு கட்டத்தில் அவருக்கு வெண்டிலேட்டர் அகற்றப்படும் என்று எதிர்பார்த்தோம். துரதிர்ஷ்டவசமாக அவர் அந்த கட்டத்தில் இல்லை. நம்மால் வெண்டிலேட்டர் உதவியை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் ஒரு நல்ல செய்தி பரிசோதனையில் அப்பாவுக்கு கொரோனா வைரஸ் நெகட்டிவ் (தொற்று இல்லை) என்று தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு கொரோனா பாஸிட்டிவ் நெகட்டிவ் பற்றி முக்கியம் இல்லை என்றும் அவருடைய நுரையீரல் தொற்று விரைவாக குணமடைய வேண்டும் என்றும் எதிர்பார்த்தோம். மருத்துவர்கள் குணமடையச் செய்துள்ளனர். அவர்கள் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
மற்றபடி, ஒரு வாரமாக அப்பா சிறிய அளவில் திருமணநாள் கொண்டாடினார். அவருடைய ஐபேடில் நிறைய கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளைப் பார்த்தார். அவர் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதைக் காண ஆர்வமாக உள்ளார். அவர் தான் பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார். அவர் தெளிவாக இருக்கிறார். அவருக்கு திட்டமிட்டபடி பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. எனது தந்தை உள்பட அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நானும் பிரார்த்தனை செய்கிறேன். தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"