தூக்குத் தூக்கி திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் எதிர்ப்பை சமாளித்து 8 பாடல்களைப் பாடி ரூ.2,000 சம்பளம் வாங்கி முத்திரை பதித்திருக்கிறார் அன்றைக்கு வளரும் பாடகராக வந்த டி.எம். சௌந்தரராஜன்.
பராசக்தி படத்தில் நடித்த பிறகு சிவாஜி கணேசனுக்கு ஏறுமுகம்தான். தமிழ் சினிமாவில் நடிப்பின் இலக்கணமாக நடிகர் திலகமானார். அதே போல, சிவாஜிக்கு அப்படியே பொருந்திப் போகிற குரலில் பாடிய டி.எம்.எஸ் சௌந்தரராஜன் தனது முதல் பாடத்தில் பாடும்போது சிவாஜி கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், சிவாஜி எதிர்ப்பை சமாளித்து பாடகர் டி.எம். சௌந்தரராஜன் எப்படி முத்திரை பதித்தார் என்பதை இங்கே பார்ப்போம்.
இயக்குனர் ஆர்.எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில், சிவாஜி கணேசன் நடிப்பில் 1954-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தூக்குத் தூக்கி. இந்த படத்தை அருணா ஃபிலிம்ஸ் தயாரித்தது.
தூக்குத் தூக்கி படம் உருவாகும்போது படத்தில் 8 பாடல்கள் வைப்பது என்று முடிவானது. இந்த 8 பாடல்களையும் பாடகர் திருச்சி லோகநாதனை பாட வைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் திருச்சி லோகநாதனை அணுகி, இந்த படத்தில் உள்ள 8 பாடல்களையும் நீங்களே பாடிவிடுங்கள், ரூ.2,000 சம்பளம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், பாடகர் திருச்சி லோகநாதன் தான் ஒரு பாடல் பாடுவதற்கு ரூ.5,00 சம்பளம் வாங்குவதாகவும் 8 பாடலுக்கு ரூ.8,000 கொடுத்தால் பாடுவதாகவும் கூறியுள்ளார். ஆனால், தயாரிப்பு நிறுவனம் அந்த அளவுக்கு பணம் கொடுக்க இயலாது என்று கூறியுள்ளது. அதர்கு திருச்சி லோகநாதன் என்னால் பாட முடியாது. மதுரையில் இருந்து டி.எம். சௌந்தரராஜன் என்று ஒரு புதுப் பாடகர் வந்திருக்கிறார். அவரை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து, அருணா ஃபிலிம்ஸ் தயாரிப்பு குழு, மதுரையில் தொகுலுவ மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் என்கிற டி.எம். சௌந்தரராஜனை தேடிப் பிடித்தார்கள். அவரிடம் இது போல, சிவாஜி கணேசன் நடிக்கும் தூக்குத் தூக்கி என்ற படத்தில் 8 பாடல் இருக்கிறது. 8 பாடலையும் நீங்களே பாடி விடுங்கள். ரூ.2,000 சம்பளம், ஒப்பந்தம் போட்டுவிடலாமா என்று கூறியிருக்கிறார்கள்.
டி.எம். சௌந்தரராஜன் தான் பாடிய முதல் படமான கிருஷ்ணன் விஜயம் படத்திலேயே 4 பாடல்களைப் பாடியவர். பாட்டில் தமிழ் உச்சரிப்பு தெளிவாக இருக்கும்.
அருணா ஃபிலிம்ஸ் கேட்டதும் சற்றும் யோசிக்காமல் சரி என்று தலையாட்டினார் பாடகர் டி.எம். சௌந்தரராஜன். ஏனென்றால், மதுரையில் பஜனை மடங்களில் பாடியது அதற்கு சன்மானமாக ஓட்டலில் டீ, காபி, ரூ. 2 சன்மானம் வாங்கியது. மாதம் ரூ.50 சம்பளத்தில் கோவை ராயல் டாக்கீஸ் அலுவகத்தில் வேலை பார்த்தது, இயக்குநர் சுந்தர் ராவ் கட்கர் வீட்டில் எடுபிடி வேலை செய்தது, எச்.எம்.டி கிராமஃபோன் கம்பெனியில் 2 பக்திப் பாடல்களைப் பாட ரூ.80 சம்பளம் வாங்கியது என எல்லாமே டி.எம்.எஸ் கண்முன்னால் வந்து போனது.
அதனால், டி.எம். சௌந்தரராஜன் அந்த 8 பாடல்களையும் பாட மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஏனென்றால், தூக்குத் தூக்கி படத்தின் கதாநாயகன் சிவாஜி கணேசன், தனக்கு பராசக்தி படத்தில் பாடிய சி.எஸ். ஜெயராமன்தான் பாட வேண்டும் பிடிவாதமாக இருந்துள்ளார். அதே போல, இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், நம்ம படத்தில் நாட்டுப்புறப் பாடலுக்கு அவருடைய குரல் ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்றார்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று தவித்த பாடகர் டி.எம். சௌந்தரராஜன், சார், நான் பாடுகிறேன், ரெக்கார்ட் செய்து கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் பாருங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று டி.எம். சௌந்தரராஜன் கூறியிருக்கிறார். இதையடுத்து, டி.எம். சௌந்தரராஜன் 3 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
டி.எம். சௌந்தரராஜன் பாடியதைக் கேட்ட சிவாஜி கணேசனுக்கு பிடித்துப்போனதால் எல்லா பாடல்களையும் நீங்களே பாடிவிடுங்கள் என்று சம்மதம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து, டி.எம். சௌந்தரராஜன் தூக்குத் தூக்கி படத்தில் 8 பாடல்களையும் பாடி ரூ.2,000 சம்பளம் வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியாகச் சென்றார். டி.எம்.எஸ் பாடிய அந்த பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.
அதற்கு பிறகு, திரைப்படங்களில் சிவாஜி கணேசன் படங்களுக்கு டி.எம். சௌந்தரராஜனின் குரல் பொருத்தமான குரலாகிப் போனது. இப்படி சிவாஜி எதிர்ப்பை சமாளித்து 8 பாடல்களைப் பாடி ரூ.2,000 சம்பளம் வாங்கி டி.எம். சௌந்தரராஜன் முத்திரை பதித்திருக்கிறார்.
ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில், 1954-ம் ஆண்டு வெளிவந்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் லலிதா, பத்மினி, ராகினி, டி. எஸ். பாலையா, பி. பி. ரங்காச்சாரி, சி. கே. சரஸ்வதி, எம். எஸ். எஸ். பாக்கியம், டி. என். சிவதாணு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“