சன் டி.வி புதிய சீரியல்: அம்மா வேடத்தில் பாலச்சந்தர் பட அறிமுக நடிகை; ஹீரோவுக்கு ஜோடியாக வில்லி நடிகை?
சன் டிவி புதிய சீரியலில் களமிறங்கும் புதுபுது அர்த்தங்கள் பட ஹீரோயின்; அம்மா கேரக்டராம்; கதாநாயகியாக நடிக்கும் ஜீ தமிழ் சீரியல் வில்லி; லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
சன் டிவி புதிய சீரியலில் களமிறங்கும் புதுபுது அர்த்தங்கள் பட ஹீரோயின்; அம்மா கேரக்டராம்; கதாநாயகியாக நடிக்கும் ஜீ தமிழ் சீரியல் வில்லி; லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ’பூவா தலையா’ எனும் புதிய சீரியலில் பாசமான அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரபல நடிகை சித்தாரா.
Advertisment
தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு என்று பெயர் பெற்றது சன் டிவி. டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல்களே முன்னணியில் இருக்கும். எதிர்நீச்சல், கயல், சுந்தரி, இனியா, வானத்தைப் போல உள்ளிட்ட சன் டிவி சீரியல்களை தமிழ் குடும்பங்கள் கொண்டாடி வருகின்றன.
இந்தநிலையில், சன் டிவி மற்றொரு சீரியலை களமிறக்குகிறது. அதில் சீரியல்களில் புகழ்பெற்ற நடிகர்கள் நடித்து வரும் நிலையில், அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார் ’புதுப்புது அர்த்தங்கள்’ புகழ் சித்தாரா.
’பூவா தலையா’ சீரியலில் 'ஈரமான ரோஜாவே' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சிவா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பச்சைக்கிளி சீரியலில் ஹீரோவாக நடித்த கிஷோர் தேவ் இந்த சீரியலிலும் ஹீரோவாக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் வில்லியாக நடித்த ஸ்வேதா நடிக்கிறார். அடுத்ததாக இந்த சீரியலில் நடிகை லதா ராவ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் ’புது புது அர்த்தங்கள்’ புகழ் சித்தாரா நடிக்கிறார். 80களில் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சித்தாராவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். தமிழில் புது வசந்தம், புரியாத புதிர், படையப்பா, முகவரி, நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் சித்தாரா நடித்துள்ளார்.
சினிமா மட்டுமல்லாது பல்வேறு சீரியல்களிலும் சித்தாரா நடித்துள்ளார். வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பராசக்தி, ஜெயா டிவியில் ஒளிபரப்பான கவரி மான்கள்,
ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஆர்த்தி மற்றும் கங்கா யமுனா சரஸ்வதி உள்ளிட்ட சீரியல்களில் சித்தாரா நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கிலும் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்தநிலையில், தற்போது சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் ’பூவா தலையா’ சீரியலில் பாசமான அம்மாவை சுற்றிலும் நகரும் கதைக்களத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சித்தாரா. மீண்டும் சின்னத்திரையில் சித்தாராவை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
தற்போது இந்த சீரியலின் டைட்டில் மற்றும் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. விரைவில் ’பூவா தலையா’ சீரியல் ஒளிபரப்பாகும் நேரம், தேதி குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியல் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“