சிவகார்த்திகேயனின் இன்றைய மார்க்கெட் வேல்யூ என்பது யாருமே கற்பனை செய்து பார்க்காத ஒன்று. டிவியில் ஷோ செய்து கொண்டிருந்த ஒரு பையன், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக முன்னேறுவார் என்று எவருமே நினைத்துப் பார்க்கவில்லை. ஏன்.. சிவகார்த்திகேயனே காணாத கனவிது.
அவரது அந்த வளர்ச்சி தெரிந்தோ, தெரியாமலோ சில நடிகர்களுக்கு பொறாமையை, கோபத்தை எரிச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். ஏற்படுத்தியும் இருந்தது. சீமராஜா தோல்வி அடைந்த போது, ஒரு பிரபல நடிகர் தனது ட்விட்டர் பக்கத்தில், மறைமுகமாக அந்த தோல்வியை கொண்டாடும் விதத்தில் ட்வீட் செய்ததை நம்மால் காண முடிந்தது.
ஆனால், தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள சீனியர் நடிகர்களிடம் இதுபோன்ற 'வயிற்றெரிச்சல்' கலாச்சாரம் என்பதெல்லாம் இருப்பதில்லை. ஏனெனில், அவர்கள் வாழ்க்கையில் பல பாடங்களை படித்து வந்தவர்கள்... சினிமாவில் உச்சம் என்றால் என்ன, சறுக்கல் என்றால் என்னவென்பதையெல்லாம், பார்த்ததுமட்டுமின்றி அனுபவித்தும் வந்திருக்கிறார்கள்.
இருப்பினும், சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி சிலருக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக அமைந்திருக்கலாம். சிவகார்த்திகேயனின் ஆரம்பக் கட்ட வளர்ச்சியில் உறுதுணையாக நின்றவர் தனுஷ். ஆனால், இன்று தனுஷின் சம்பளத்தை விட சிவாவின் சம்பளம் அதிகம்.
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் உள்ள தனுஷின் மார்க்கெட்டை, சம்பளத்தை வெறும் 5 வருட காலத்தில் ஓவர்டேக் செய்தவர் சிவகார்த்திகேயன். திரைத் துறையைச் சேர்ந்த சில முக்கிய நபர்களின் தகவல் படி, சிவாவின் ஒரு படத்திற்கான சம்பளம் 15 கோடி. தனுஷின் சம்பளம் 8 கோடி.
அண்ணன் - தம்பி என்று வலம் வந்த இருவரின் உறவு, சிவாவின் பிரம்மாண்ட எழுச்சிக்குப் பிறகு பார்க்கும் இடங்களில் 'ஹாய்' சொல்லும் அளவில் இப்போது உள்ளது.
சிவாவின் இந்த எழுச்சி அலையில் தெரிந்தோ, தெரியாமலோ உள்ளிழுக்கப்பட்டவர் சூர்யா. ரசிகர்களோ, விமர்சகர்களோ, சூர்யாவின் மார்க்கெட்டை சிவகார்த்திகேயன் மிஞ்சி விட்டார் என்பது போன்ற செய்திகள் சினிமா வட்டாரத்தில் பரவத் தொடங்க, சூர்யாவின் ரசிகர்களுக்கு விரும்பத்தகாத செய்தியானது அது.
உண்மையில் சூர்யாவுக்கு இந்த செய்தி, தெரியுமோ என்னவோ, அது நமக்கு தெரியாது. ஆனால், அவரது 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வெளியான போது, இதுபோன்ற செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. இதனால், சூர்யா தரப்பு அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
சூர்யா ஒரு படத்துக்கு தற்போது வாங்கும் சம்பளம் 25 கோடி என்பது தகவல்.
இந்தச் சூழ்நிலையில், மீண்டும் ஒரு சூர்யா - சிவா க்ளாஷ் இப்போது ஏற்பட்டிருக்கிறது. காப்பான் - நம்ம வீட்டுப் பிள்ளை வடிவத்தில்...
காப்பான் vs நம்ம வீட்டுப் பிள்ளை
கடந்த செப்.20ம் தேதி கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா நடித்து வெளியான 'காப்பான்' படம் கலவையான விமர்சனம் பெற்று ஓடி வருகிறது. அதேபோல், செப்.27ம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' வெளியாகி பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது.
சென்னை பாக்ஸ் ஆஃபீஸில் முதல் நாள் ரூ.58 லட்சம் வசூலித்த EVP, பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸால் இரண்டாவது நாளில் ரூ.68 லட்சம் வசூலித்தது. ஞாயிற்றுக்கிழமை 72 லட்சத்துக்கும் அதிகமாக வசூலிக்க, மொத்தமாக முதல் வாரத்தில் 1.99 கோடி வசூலித்துள்ளது.
சூர்யாவின் காப்பான் ரூ.99.28 லட்சம் வசூல் செய்து, சென்னை பாக்ஸ் ஆஃபீஸில் இரண்டாம் இடம் பிடிக்க, மொத்தம் 10 நாளுக்கு ரூ.5.01 கோடி கலெக்ஷன் ஆகியுள்ளது.
நம்ம வீட்டுப் பிள்ளைக்கு குடும்ப குடும்பமாக மக்கள் தியேட்டரை நோக்கி வரும் காரணத்தாலும், சிறந்த பொழுதுபோக்கு படமாக இருப்பதாலும், காப்பான் படத்தின் மொத்த வசூலை சிவகார்த்திகேயன் விஞ்சி விடுவார் என்பதே திரை வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.
பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம், 93 ஷோவில் 26.08 லட்சம் வசூலித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
எதுவாக இருந்தாலும், சூர்யாவுக்கென இருக்கும் தனி ரசிகர் கூட்டம், அவருக்கென இருக்கும் மாஸ் என்பதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்பதே உண்மை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.