நடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan

சிவாஜி கணேசனின் நினைவு தினம்

By: Updated: July 21, 2018, 01:40:56 PM

சிவாஜி கணேசன்…. நாடு போற்றிய ஒப்பற்ற கலைஞனின், மனிதனின், நடிகனின் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திரைத்துறையில் எம்.ஜி.ஆர் எனும் மிகப்பெரிய ஆளுமைக்கு சரிக்கு சமமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ஒரே பிரம்மாண்டம் சிவாஜி கணேசன் மட்டுமே. இவரது காலக்கட்டத்தில் இவரது நடிப்பிற்கு ஈடு கொடுக்கும் வகையில் சில நடிகர்கள் இருந்தாலும், அவர்களிடம் இருந்து இவர் வேறுபட்டது, இவர் ஏற்கும் கதாபாத்திரமாகவே ரியலாக மாறிப் போவதில் தான். ‘தில்லான மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜியும், ஏ.வி.எம் ராஜனும் நாதஸ்வரம் வாசிப்பார்கள். அதில், ஏ.வி.எம் ராஜனும், நிஜ நாதஸ்வர வித்வான் போலவே நடித்து அசத்தியிருப்பார். ஆனால், சிவாஜி ஒருபடி மேலே சென்று, வித்வான்கள் போல, தனது புருவங்களை மாறி மாறி இசைக்கு ஏற்ப அசைத்து, அக்மார்க் வித்வானாகவே வாழ்ந்திருப்பார். இங்கு தான் சிவாஜி கணேசன் மற்ற நடிப்பு சூரர்களை வென்றார்.

இதெல்லாம், வெறும் சாதாரண சாம்பிள் தான். அவரது நடிப்பைப் பற்றி விளக்க ஆயிரம் பக்கங்கள் கூட போதாது.

2001ம் ஆண்டு, இதே நாள் அவர் மறைந்த போது, ஒட்டுமொத்த திரையுலகமும் கண்ணீரால் அவரது பாதங்களை நனைத்தது. வேறென்ன சொல்ல… நாமும் அவர் இல்லாததை நினைத்து கண்ணீர் தான் விட முடியும்.

இந்நிலையில், நடிகர் சிவாஜிகணேசனின் 17-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் சிவாஜியின் குடும்பத்தினர் ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்கம் சார்பாக நாசர், மனோபாலா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, சிவாஜி மணிமண்டபத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் பங்களிப்பு இருப்பதாக சுட்டிக் காட்டினார். திரைப்பட ரசிகர்களின் நினைவில் உள்ளவரை, சிவாஜி கணேசன் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே கருதுவதாகவும் பிரபு பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் சங்கத் தலைவர் நாசர், சிவாஜியின் சாயல் இல்லாமல் யாரும் நடிக்க முடியாது எனவும், அவர் பயணித்த தூரத்தில் தங்களால் பயணிக்க முடியாது எனவும் கூறினார்.

சிவாஜி கணேசனின் ரசிகர்கள் ஆயிரக் கணக்கானோர், தங்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Sivaji ganesan 17th death anniversary

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X