தந்தை சிவாஜி கணேசன் சேர்த்து வைத்த சொத்தில் பங்கு தரவில்லை என்றும், தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை விற்றுவிட்டதாக கூறி நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமார் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் சகாப்த நடிகர்களில் ஒருவராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவர் திரைத்துறையில் நடித்துக்கொண்டிருந்தபோது தமிழகத்தின் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்திருந்தார். இந்த சொத்துக்களின் மதிப்பு சுமார் 270 கோடி என்று கூறிப்படுகிறது.
இந்நிலையில் சிவாஜி கணேசன் இறந்ததை தொடர்ந்து அவரது வாரிசுகளாக மகன்கள் ராம்குமார் பிரபு மகள்கள் சாந்தி ராஜ்வி ஆகிய 4 பேரும் அனுபவித்து வரும் நிலையில், தங்களுக்கு தெரியாமல் பிரபு ராம்குமார் இருவரும் தங்களது தந்தையின் சில சொத்துக்களை விற்றுவிட்டதாகவும், சில சொத்துக்களை அவர்களின் மகன்களில் பெருக்கு மாற்றிவிட்டதாகவும் சிவாஜ கணேசனின் மகள்கள் இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களது தந்தை தனது சொத்துக்கள் குறித்து எவ்வித உயிலும் எழுதி வைக்காத நிலையில், ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் பொய்யான உயிலை தயாரித்து எங்களை ஏமாற்றிவிட்டனர். மேலும் எங்களில் தாய் வழி சொத்துக்களிலும் எங்களுக்கு பங்கு தரவில்லை.
தங்களது அப்பா சேர்த்து வைத்த 10 கோடி மதிப்புள்ள சுமார் 1000 சவரன் தஙகம் வெள்ளி மற்றும் வைரம் உள்ளிட்ட பொருட்களை கூட தராமல் ஏமாற்றிவிட்டனர். அதேபோல் கோபலபுரத்தில் உள்ள வீட்டை 5 கோடிக்கு விற்றுவிட்டனர். ராயப்பேட்டையில் உள்ள 4 வீடுகளில் இருந்து வரும் வாடகை பணத்தில் கூட எங்களுக்கு பங்கு தருவதில்லை.
இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து வாரிசு உரிமை சட்டத்தின் படி தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு உரிமை இருப்பதால், நீதிமன்றம் இந்த பிரச்சினையில் தலையிட்டு பாகபிரிவினை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனு சிவாஜி குடும்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“