/indian-express-tamil/media/media_files/2025/09/22/ajith-sivaji-2025-09-22-19-18-50.jpg)
சிவாஜி - அஜித் கூட்டணி, நான் முடியாதுனு சொல்லிட்டேன்; பிரபல இயக்குனர் ஓபன் டாக்: எந்த படம் தெரியுமா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தமிழ்த்திரையுலகின் ஓர் ஆளுமை என்றே கூறலாம். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்னும் அளவிற்கு சினிமா துறையில் முன்னோடியானவர். நடிப்புக்கு இலக்கணம் வகுத்த சிவாஜி கணேசனின் சினிமாவில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி, 4 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமைக்குரியவர்.
ரஜினி, கமல் என அடுத்த தலைமுறை நடிகர்கள் வந்தபோது, தான் எவருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்தார். 'முதல் மரியாதை', 'தேவர் மகன்', 'படையப்பா' போன்ற படங்கள் இதற்கு சிறந்த உதாரணங்கள். ரஜினி, கமல், விஜய், முரளி போன்ற நடிகர்களுக்கு அப்பாவாக நடித்து, தனது கம்பீரத்தை இறுதி வரை தக்கவைத்துக் கொண்டார். அப்படிப்பட்ட மாபெரும் கலைஞன் தனது கடைசி மூச்சு வரை நடிப்புத் துறையில் இயங்கினார். அவரது கடைசித் திரைப்படம் 'பூப்பறிக்க வருகிறோம்'.
1999 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில், இன்றைய முன்னணி நடிகர் விஷாலின் அண்ணன் அஜய் நாயகனாக நடித்தார். இந்தப் படத்தை இயக்கியவர் ஏ. வெங்கடேஷ். அப்போது, ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் படங்களை இயக்கி வந்த வெங்கடேஷ், சிவாஜி கணேசன் இந்தப் படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணி, அவரைச் சந்திக்க முடிவு செய்தார்.
தனது நண்பர் ஒருவருடன் சிவாஜி கணேசனின் வீட்டிற்குச் சென்றார் வெங்கடேஷ். உலகமே வியந்து பார்க்கும் ஒரு நடிகருக்கு கதை சொல்லும் அரிய வாய்ப்பு கிடைத்ததை எண்ணி அவர் பூரித்துப் போனார்.
சிவாஜி கணேசன், "ஏதோ கதை வைத்திருக்கீங்களாமே... என்ன, சொல்லுங்கள்" என்று கேட்டார். அந்த மாபெரும் கலைஞனின் முன்பு அமர்ந்த அந்தத் தருணத்தில், இயக்குநர் வெங்கடேஷ் திடீரென தரையில் அமர்ந்தார். இதைக் கண்ட சிவாஜி கணேசன் வியந்துபோய், "ஏன் தரையில் உட்கார்ந்திருக்கீங்க? 'சிவாஜி இயக்குநரை தரையில் உட்கார வைத்து கதை கேட்டார்' என மீடியாக்கள் எழுதப் போகின்றன. வேண்டாம், எழுந்து சோஃபாவில் உட்காருங்கள்" என்றார்.
அதற்கு வெங்கடேஷ், "இல்லைப்பா... உங்கள் படங்களை எல்லாம் எங்கள் ஊர் தியேட்டரில் நாற்காலியில் அமர்ந்து, மேல்நோக்கிப் பார்த்து, விசில் அடித்து ரசித்தவன் நான். இப்போது உங்களுக்குச் சமமாக சோஃபாவில் அமர்ந்து என்னால் கதை சொல்ல முடியாது. நான் தரையில் அமர்ந்தே உங்களை மேல்நோக்கிப் பார்த்தபடி கதை சொல்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
வெங்கடேஷின் அன்பையும், மரியாதையையும் கண்டு புன்னகைத்த சிவாஜி கணேசன், அவரது உணர்வுகளை மதித்து, தரையில் அமர்ந்து கதை சொல்ல அனுமதித்தார். வெங்கடேஷ் சொன்ன கதை சிவாஜிக்கு மிகவும் பிடித்தது. இதை அறிந்த தயாரிப்பாளர் சி.வி. ராஜேந்திரன், தானே இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார். மேலும், படத்தின் கதாநாயகனாக அப்போது வளர்ந்துவந்த நடிகரான அஜித் குமாரை நடிக்க வைக்கலாம் என்றும், அவருக்கான கால்ஷீட்டை தானே வாங்கித் தருவதாகவும் வெங்கடேஷிடம் தெரிவித்தார்.
இரவு முழுவதும் யோசித்த வெங்கடேஷ், அடுத்த நாள் சி.வி. ராஜேந்திரனைச் சந்தித்தார். தனக்கு முதல் வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டிக்கு துரோகம் செய்ய முடியாது என்றும், தான் ஏற்கனவே உறுதியளித்தபடி, ஜி.கே.ரெட்டியின் மகன் அஜய்யை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி, சிவாஜி கணேசன் நடிப்பில் இந்தப் படத்தை இயக்கப் போவதாகவும் உறுதியாகத் தெரிவித்தார். இறுதியில், அஜய் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் 'பூப்பறிக்க வருகிறோம்' திரைப்படம் வெளியானது. இதுவே நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கடைசித் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.