ரஜினிகாந்துக்கு அடுத்து சிவகார்த்திகேயன்? சன் பிக்சர்ஸ் கணக்கு இதுதான்

மூன்று இயக்குநர்களிடமும் அடுத்த சூப்பர் ஸ்டார் இமேஜுக்கு ஏற்றாற்போல் கதையை தயாரிக்க சன் பிக்சர்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறதாம்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் முதன்முறையாக நேரடியாக தயாரித்த எந்திரன் பட பாடல் வெளியீட்டு விழாவில், ‘மலேஷியாவின் ட்வின் டவர்ஸ் போல உறுதியாக என்றும் ரஜினிதான் சூப்பர் ஸ்டார்’ என்று சொன்னார்.

கடந்த 40 வருடங்களாக இதுதான் உண்மை என்றாலும் அதை வெளிப்படையாக தயாரிப்பாளர்கள் சொல்வதில்லை, கலைப்புலி தாணு போன்ற சில தயாரிப்பாளர்களை தவிர! எட்டு வருடமாக படம் தயாரிக்கவே மிகவும் தயங்கினார் கலாநிதிமாறன். அதற்கு சில அரசியல் காரணங்கள் கூறப்பட்டாலும், கதாநாயகர்களின் நிரந்தரமில்லாத வெற்றியும் வசூல் தோல்விகளும் ஒரு காரணம்.

ரஜினியை வைத்து 2.0 தொடங்க அவர் ஒரு தொகை அட்வான்ஸும் கொடுத்து வைத்திருந்ததாக பேச்சு உண்டு. சந்தர்ப்ப சூழலால் 2.0-வை லைகா நிறுவனம் கையகப்படுத்தியதால், கலாநிதி படம் தயாரிப்பதையே நிறுத்தியிருந்தார்.

விஜய்யின் சர்கார் படத்தை கலாநிதி மாறன் தயாரித்தது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்! தொடர்ந்து ஆல் கிளாஸ் ஆடியன்ஸிடம் செல்வாக்கை பெற்றிருக்கும் சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்க பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டிருந்தன. இந்த வேளையில்தான் மீண்டும் ரஜினி படம் தயாரிக்கும் வாய்ப்பை பெற்றது சன் பிக்சர்ஸ்.

கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்தின் பேட்ட படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும், ‘ரஜினி இருக்கும் வரை அவர்தான் சூப்பர்ஸ்டார்’ என்று கலாநிதி மாறன் சொன்னார்.

ரஜினி அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக முடிவு ஆகியிருக்கிறது. இது குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அது அவரின் கடைசி படமாக இருக்கலாம். காரணம், அரசியலுக்கு வருவதையும், அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகுவதையும் உறுதி செய்துவிட்டார் ரஜினிகாந்த்.

இந்தச் சூழலில் ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தை அடிப்படையில் சன்பிக்சர்ஸ், சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க தயாராகி வருவதாக தெரிகிறது. வேலைக்காரன் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டபோதே சிவகார்த்திகேயனின் பிசினஸ் கலாநிதிமாறனை ஆச்சர்யப்பட வைத்ததாம்.

தற்போதும் 25 அல்லது 30 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு ரசிகர் பலத்துடன் இருக்கும் நடிகர்களின் படம் அளவுக்கு ஓப்பனிங்கும் வசூலும் சிவகார்த்திகேயனுக்கும் இருப்பதாக விநியோக வட்டாரத்தில் சொல்கின்ற தகவல் கலாநிதிமாறனை எட்டியிருக்கிறது. எனவேதான் சிவகார்த்திகேயனுடன் சன் பிக்சர்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

பிரபல இயக்குநர்கள் மூன்று பேரை அழைத்து சிவகார்த்திகேயனுக்கு கதை தயார் செய்யும் படி சன் பிக்சர்ஸ் தரப்பில் கூறியிருக்கிறார்களாம். அந்த 3 இயக்குனர்களில் ஒருவர் அஜீத்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா என்று தகவல்!

மூன்று இயக்குநர்களிடமும் அடுத்த சூப்பர் ஸ்டார் இமேஜுக்கு ஏற்றாற்போல் கதையை தயாரிக்க சன் பிக்சர்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறதாம். கலாநிதியை பிசினஸ் மேக்னெட் என்று பலரும் கூறிவரும் நிலையில், சிவகார்த்திகேயன் குறித்து அவர் கணித்து களம் இறங்கியிருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

திராவிட ஜீவா

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close