பாபு
சிவகார்த்திகேயன் நடித்துவரும் சீமராஜா படத்தை செப்டம்பர் 13 வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும்படி திரையுலகிற்குள் குரல்கள் எழுந்துள்ளன.
திரையுலக வேலைநிறுத்தத்துக்குப் பிறகு, சின்ன பட்ஜெட் படங்கள் பலன்பெறும் வகையிலும், பட வெளியீட்டில் ஒரு சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவும் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்த தேதியை வைத்தே படவெளியீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற விதிமுறையை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்படுத்தியது. முதலில் தணிக்கை பெறும் படம் முதலில் வெளியாகும். இந்த புதிய விதிமுறை காரணமாக படப்பிடிப்பின் போதே வெளியீட்டு தேதியை வெளியிடுவது சாத்தியமில்லை. ஆனால், இதனை கருத்தில் கொள்ளாமல் சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்தனர். தொடர்ந்து இப்போது சீமராஜா படம் செப்டம்பர் 13 வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
சீமராஜா படத்தின் படப்பிடிப்பு நாளையே நிறைவுபெறுகிறது. அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் உள்ளன. அவற்றை முடித்த பிறகே தணிக்கைக்கு அனுப்ப முடியும். தணிக்கைச் சான்றிதழ் பெற்றாலும், செப்டம்பர் 13 ஆம் தேதியில் வெளியாக, சீமராஜா படத்துக்கு முன்பாக தணிக்கைச் சான்றிதழ் பெற்ற படங்கள் போட்டிக்கு வந்தால் சீமராஜாவுக்கு செப்டம்பர் 13 வெளியாக அனுமதி கிடைக்காது என்பதே நிலைமை. இது தெரிந்திருந்தும் எப்படி வெளியீட்டு தேதியை அறிவிக்கலாம் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
சிவகார்த்திகேயனின் கடைசிப் படம் வேலைக்காரனும் இதேபோன்ற சர்ச்சையில் சிக்கி அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. எந்தப் படமாக இருந்தாலும் பத்திரிகைகளில் கால்பக்க விளம்பரமே தர வேண்டும் என்பது விதி. பெரிய பட்ஜெட் படங்கள் அதிக விளம்பரம் செய்தால் சின்ன பட்ஜெட் படங்கள் நசுக்கப்படும் என்பதால் இந்த கட்டுப்பாடை தயாரிப்பாளர்கள் சங்கம் பல வருடங்களாக கடைபிடித்து வருகிறது. இதனை மீறி வேலைக்காரன் படத்துக்கு தினசரிகளின் முதல்பக்கத்தில் முழுப்பக்க விளம்பரம் அளிக்கப்பட்டது. விதிமுறையை மீறியதற்காக வேலைக்காரன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 24 ஏஎம் ஸ்டுடியோஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விளம்பரத்தை தந்தது நாங்கள் அல்ல, படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய விஜய் டிவி என்ற விளக்கம் ஏற்கப்படவில்லை.
வேலைக்காரனைத் தொடர்ந்து சீமராஜாவும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதற்கு அபராதம் விதிக்கப்படாது. அதேநேரம் அவர்கள் விரும்பும் செப்டம்பர் 13 ஆம் தேதியில் படத்தை வெளியிட அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.