Yenga Annan Lyric Video: கார்த்தியின் கடைக்குட்டி படத்திற்குப் பிறகு, இயக்குநர் பாண்டிராஜ் தற்போது இயக்கி வரும் படம், ‘நம்ம வீட்டு பிள்ளை’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதில் அனு இம்மானுவேல் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதோடு ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரக்கனி, சூரி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசை டி.இமான்.
மே மாதம் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படபிடிப்பு தொடங்கிய நிலையில், செப்டம்பரில் இதனை வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர். இந்நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள முதல் பாடலை தற்போது சன் பிக்சர்ஸ் குழுவினர் வெளியிட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் – ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் தங்கை பாசத்தை குறிப்பிட்டு, ‘எங்க அண்ணன்’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நாகாஷ் அஸிஸ், சுனிதி செளகான் பாடியுள்ள இப்பாடல் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.